- சரியான பொருளாதார முறையின் மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லாவிட்டாலும் பெற்ற வெற்றிகளை இழக்க நேரிடும்.
- நாட்டில் கறுவா பயிர்ச் செய்கையை மீண்டும் முன்னேற்றி ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் – ஜனாதிபதி.
சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாட்டுக்கு கிடைத்த வெற்றிகளை இழக்க நேரிடும் எனவும், நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க சிலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அந்த பொய்களில் சிக்கினால் நாடு மீண்டும் நிரந்தரமாக பொருளாதாரம் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் எனவும் சுட்டிக் காட்டினார்.
காலி கரந்தெனிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை இன்று (10) பிற்பகல் திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் முதல் தடவையாக கறுவா அபிவிருத்தி திணைக்களம் என்ற புதிய திணைக்களத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் வகையில் அதன் பிரதான அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
கறுவா கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக தயாரிக்கப்பட்ட பத்தாண்டு கால வரைபடம் மற்றும் கறுவாச் செய்கை தொடர்பில் தயாரிக்கப்பட்ட “கறுவா கையேடு” தொழில்நுட்ப பிரசுரமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
தெரிவுசெய்யப்பட்ட கறுவா தொழில் முயற்சியாளர்களுக்கு GAP மற்றும் GI சான்றிதழ்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
”200 ஆண்டுகளுக்குப் பிறகு கறுவா அபிவிருத்தித் திணைக்களத்தை ஆரம்பித்திருக்கிறோம். அதன்படி, நாட்டில் கறுவாச் செய்கையை மேம்படுத்தும் பணிகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் மீண்டும் கறுவாச் செய்கையை அபிவிருத்தி செய்வது இத்திணைக்களத்தின் பொறுப்பாகும். முதலில் கறுவா உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அங்கு, ஒவ்வொரு ஏக்கரிலிருந்தும் அதிகபட்ச உற்பத்தியைப் பெற வேண்டும். மேலும், குறைந்த தரத்திலான கறுவாவுக்குப் பதிலாக உயர்தரத்திலான கறுவா வகைகளை வளர்க்க வேண்டும்.
மேலும், கறுவா பயிரிடும் நிலப் பரப்பை அதிகரிக்க வேண்டும். அரசாங்கம் புதிய காணிகளை வழங்குவதற்கும் அவர்களின் நிலத்தில் ஏனைய பயிர்களுடன் கறுவாவைப் பயிரிடுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் கறுவா உற்பத்தியை மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகரிக்கலாம்.
மேலும் கறுவா விற்பனையை அதிகரிக்க வேண்டும். விற்பனை இல்லாமல் உற்பத்தியை அதிகரிப்பதில் எந்தப் பயனும் இல்லை. எனவே, விற்பனையை அதிகரிக்கத் தேவையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும். நிறுவனங்கள் அந்தப் பொறுப்பை ஏற்குமானால் அரசாங்கம் அவர்களுக்கு ஒத்துழைக்க எதிர்பார்க்கிறது.
எனவே, புதிய சந்தை வாய்ப்புகளைப்பெற்று முன்னேற வேண்டும். கரந்தெனிய பிரதேச கறுவா அபிவிருத்தி நிலையமாக இந்த நிறுவனத்தை மாற்ற எதிர்பார்த்துள்ளோம். பழைய முறைப்படி அன்றி நவீன முறைப்படி இந்த விவகாரங்கள் முன்வைக்கப்பட வேண்டும். எதிர்காலத்தைத் தேடி நாம் கடந்த காலத்தை அடைந்திருக்கிறோம்.
இறக்குமதிப் பொருளாதாரத்தில் நீடித்தது தான் நமது நாடு வங்குரோத்தடைவதற்கு முக்கிய காரணமாகும். இறக்குமதிக்காக பெரிய அளவில் கடன் வாங்கினோம். சரியான பொருளாதாரக் கொள்கைகளால், இன்று நாம் வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட முடிந்தது. அத்துடன் நாம் செலுத்த வேண்டிய கடனில் இருந்து சுமார் 08 பில்லியன் டொலர்கள் குறைக்கப்பட்டு 2043 ஆம் ஆண்டு வரை கடனை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு நாம் செல்லவில்லை என்றால் இன்னும் 15 வருடங்களில் நமது நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும். அப்படியானால், நாம் விரைவில் ஒரு புதிய பொருளாதாரக் கட்டமைப்புக்கு செல்ல வேண்டும். அங்கு ஏற்றுமதி பொருளாதாரம் மூலம் அந்நிய செலாவணியை ஈட்ட வேண்டும்.
அன்று நாம் உலகிற்கே கறுவாவை கொடுத்தோம். இப்போது நாம் அந்த நிலைமைக்குத் திரும்ப வேண்டும். அக்காலத்தில் புத்தளத்திலிருந்து ஹம்பாந்தோட்டை வரை கறுவா பயிரிடப்பட்டது. அந்தச் செயற்பாடுகளை திட்டமிட்ட அடிப்படையில் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். மேலும், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீடுகளைப் பெறவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
இரண்டு வருடங்களுக்கு முன் நாட்டில் நிலவிய நிலைமையைச் சொல்லத் தேவையில்லை. இந்த நாட்டை மீட்க முடியாது என்று சிலர் கூறினர். நான் பேராசையில் ஆட்சிக்கு வந்தாக சிலர் கூறினர். எப்படியோ நாம் நாட்டை மீட்டு விட்டோம். நாம் சரியான பாதையில் செல்லாவிட்டால், இந்த வெற்றி நம் கையிலிருந்து நழுவக்கூடும். இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வழியை நாம் இப்போது காட்டியுள்ளோம். ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விடயங்களைச் சொல்கிறார்கள். பல்வேறு சுவர்க்கலோக வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் நாட்டின் வெற்றியை எவ்வாறு பாதுகாத்து முன்னேறுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். எனவே இன்னும் 10 வருடங்கள் இந்த சரியான பாதையில் சென்றால் எந்த பிரச்சினையும் இல்லாமல் அபிவிருத்தி அடைய வாய்ப்பு இருக்கிறது” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன,
”கறுவா அதிகம் பயிரிடப்படும் பிரதேசத்தில் கறுவா அபிவிருத்தி திணைக்களத்தை நிறுவியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். உலக சந்தையில் இலங்கை கறுவாவுக்கு தனித்துவமான இடம் உண்டு. மெக்சிகோ மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இலங்கை கறுவாவுக்கு அதிக கேள்வி உள்ளது. அதில் பெரும்பாலான கறுவா அமெரிக்காவிற்கு மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகில் கறுவாவுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் மரவள்ளிக்கிழங்கு புற்றுநோயை உருவாக்கும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. எனவே இலங்கை கறுவாவுக்கு அதிக பெறுமதியைப்பெற்றுக் கொடுக்க வேண்டும்” என்றார்.
விவசாய மற்றும் தோட்டக்கலை அமைச்சர் மஹிந்த அமரவீர,
”கைத்தொழில் அமைச்சின் கீழ் வரக்கூடிய நிறுவனமாக தென் மாகாணத்தில் நிறுவப்பட்ட முதலாவது திணைக்களமாக கறுவா அபிவிருத்தி திணைக்களம் வரலாற்றில் இடம்பிடிக்கிறது. கறுவா பயிற்செய்கைக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப அறிவை வழங்க இந்த திணைக்களம் பணியாற்றும். புதிய பயிற்செய்கை நிலங்களை வழங்கி கறுவாப் பயிற்செய்கையை விரிவுபடுத்த எதிர்பார்க்கிறோம்.
ஹம்பாந்தோட்டை மாவட்ட விவசாயிகள் மஞ்சளை பயிரிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் காட்டு யானைகளால் ஏற்படும் ஆபத்தை குறைக்கலாம். கெசியாவின் ஏகபோகத்தையும் புற்றுநோயையும் உலகுக்கு எடுத்துரைத்து சிறந்த கறுவாவை உலகிற்கு வழங்க நாம் பாடுபட வேண்டும். இதன் ஊடாக அதிக அந்நியச் செலாவணியை ஈட்டும் வாய்ப்பு உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், உரம் இல்லாமல், விவசாயிகள், வயல்களை விட்டும் நெடுஞ்சாலைக்கு வந்தனர். ஆனால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வெளிநாட்டு உறவுகளை அடிப்படையாக கொண்டு உரம் கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். அந்த வேலைத் திட்டத்தின் காரணமாகவே இன்று இலங்கையின் பாவனைக்குத் தேவையான அனைத்து அரிசியையும் உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. மொத்தத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கையின் பொருளாதாரத்தை சிறந்த பாதைக்கு கொண்டு வர முடிந்தது” என்றும் அவர் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, டி.பி.ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, சம்பத் அத்துகோரள மற்றும் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.