இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் பால் மற்றும் ஆடு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக கால்நடை விரிவாக்க சேவைகளை வவலுப்படுத்தவதிலுள்ள சவால்கள், இடைவெளிகள் மற்றும் உத்திகளை கண்டறிதல்

சண்மிக்கா ராஜேஸ்வரன்ஜாழனிராமராஜ்சாகரிகா ஹிதிகமுஹெக்டர்கொப்பேகடுவகமநலஆராய்ச்சிபயிற்சிநிறுவகம்

அறிமுகம் –

இலங்கையில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் வருமான உருவாக்கத்தை உறுதிப்படுத்துவதில் கால்நடை வளர்ப்பு, குறிப்பாக பால் மாடுகள் மற்றும் ஆடு வளர்ப்பு, முக்கிய பங்கு வகிக்கிறது. உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், விலங்குகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், சிறு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப அறிவு, கால்நடை மருத்துவ சேவைகள் மற்றும் சந்தை இணைப்புகளை வழங்கவும் திறமையான கால்நடை விரிவாக்க சேவைகள் அத்தியாவசியமானவை ஆகும். எனினும், வளங்களின் கிடைப்புத் தன்மை, அடிப்படை வசதிகள் மற்றும் விவசாயிகளின் பங்கேற்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் பிராந்தியங்களுக்கிடையே விரிவாக்க அமைப்புகளின் செயல்திறன் மாறுபடுகிறது.

இந்தப் பின்னணியில், “இலங்கையில் பால் மாடுகள் மற்றும் ஆடு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக கால்நடை விரிவாக்க சேவைகளை வவலுப்படுத்தவதிலுள்ள சவால்கள், இடைவெளிகள் மற்றும் உத்திகளை கண்டறிதல் என்ற விரிவான ஆய்வின் ஒரு பகுதியாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தப்பட்ட கால்நடை வைத்தியர்களுடனான குழு கலந்துரையாடலின் முடிவுகளை இந்த அறிக்கை வழங்குகிறது. இக்கலந்துரையாடலில் முக்கிய கால்நடை விரிவாக்க பங்குதாரர்கள் கலந்து கொண்டு, தற்போதுள்ள விரிவாக்க சேவை வழங்கல் முறைகளை மதிப்பாய்வு செய்ததுடன், செயல்பாட்டு சவால்கள் மற்றும் சேவை குறைபாடுகளை அடையாளம் காணவும், சேவைகளின் செயல்திறனை மேம்படுத்தக்கூடிய நடைமுறை உத்திகளை ஆராயவும் முயன்றோம்.

விரிவாக்க சேவைகளின் பங்கு மற்றும் சேவை வழங்கல் முறைகள்

விரிவாக்க சேவைகளின் பங்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை விரிவாக்க சேவைகளின் முதன்மையான பொறுப்பு, பிரிவுவாரியான கால்நடை மருத்துவ அலுவலகங்கள் மூலமாக கால்நடை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆதரவு மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குவதாகும். இதனுடன், விவசாயிகளுக்கு பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துதல், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துதல், செயற்கை கருவூட்டல் சேவைகளை வழங்குதல், தீவன மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆலோசனைகள் வழங்குதல், ஒழுங்கமைக்கப்பட்ட பதிவுகள் மற்றும் தரவு சேகரிப்பு அமைப்புகளை பராமரித்தல், தொழில்நுட்ப மாற்றத்தை எளிதாக்குதல், மேலும் மாடு மற்றும் ஆடுகளுக்கான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை முக்கிய பொறுப்புக்களாக காணப்படுகின்றது.

செயற்கை கருவூட்டல் சேவைகள் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் (DAPH) கீழ் கிடைக்கின்றன. இருப்பினும், நடைமுறையில் பெரும்பாலான ஆடு வளர்ப்பாளர்கள், சேவைகளின் குறைந்த அணுகல் மற்றும் பயன்பாடு காரணமாக இயற்கை இனப்பெருக்க முறைகளையே பயன்படுத்துகின்றனர். தீவன மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் பெரும்பாலும் பாரம்பரிய முறைகளாகவே இருந்து, மேய்ச்சல் மற்றும் இயற்கை தீவன வளங்களை அதிகம் சார்ந்துள்ளன. இதனால், குறிவைத்த தொழில்நுட்ப வழிகாட்டல் மற்றும் தொடர்ச்சியான ஆதரவு அவசியமாகிறது. சிறு விவசாய நிலங்களில் திறந்த மேய்ச்சல் முறைகள் அதிகமாக காணப்படுவதால், ஆடுகள் மற்றும் மாடுகளுக்கான இயற்கை இனப்பெருக்கம் பரவலாக நடைமுறையில் உள்ளது. இம்முறைகளின் கீழ் உற்பத்தித்திறனை அதிகரிக்க இனப்பெருக்க மேலாண்மை மற்றும் இனப்பெருக்க செயல்திறன் குறித்த ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்குவதில் விரிவாக்க சேவைகள் கவனம் செலுத்துகின்றன.

விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் காலாண்டு அடிப்படையில் நடத்தப்படுகின்றன. ஆனால், மனிதவள மற்றும் உபகரண குறைபாடுகள் காரணமாக அவற்றின் விரிப்பு வரம்புடையதாக உள்ளது. மேம்படுத்தப்பட்ட நடைமுறைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக தொடர்ச்சியான தொடர்பும் கண்காணிப்பும் அவசியமாகும்.

கால்நடை தயாரிப்புகளின் சந்தைப்படுத்தல் பெரும்பாலும் அங்கீகாரம் பெறாத முறையில் நடைபெறுகிறது; சிறு விவசாயிகள் இடைத்தரகர்களை சார்ந்திருக்கின்றனர். கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தி, அதிகாரப்பூர்வ சந்தைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதையே விரிவாக்க சேவைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

முறையான நோய் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு திட்டங்கள் மட்டக்களப்பு கால்நடை விசாரணை மையத்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இம்மையம் தடுப்பூசி முகாம்கள், நோய் கண்டறிதல் மற்றும் விலங்குகளின் ஆரோக்கிய கண்காணிப்பை ஆதரிக்கிறது. வருடந்தோறும் பெருமளவிலான தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. கால் மற்றும் வாய் நோய் (FMD) அபாய வகைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டம் முன்னுரிமை மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உள்ளூர் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை விசாரணை மையம், பிரிவுவாரியான அலுவலகங்களுடன் இணைந்து தடுப்பூசி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கின்றனர். தொடர்ந்து கண்காணிப்பு, அறிக்கையிடல் மற்றும் தொடர்ச்சி தடுப்பூசி நடவடிக்கைகள் நோய் பரவலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

பால் உற்பத்தியாளர்கள் தங்களது பாலை உள்ளூர் பால் கூட்டுறவுகள் மற்றும் மில்கோ (MILCO) நிறுவனத்தின் சேகரிப்பு வலையமைப்புகளுக்கு வழங்குகின்றனர். கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின்  தரவுகளின்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 4.48 மில்லியன் லிட்டர் பால் அதிகாரப்பூர்வ சேகரிப்பு முறைகளின் மூலம் பெறப்படுகிறது.

சேவை வழங்கல் முறைகள்

விரிவாக்க சேவைகள் வழங்கப்படுவதற்காக பொதுவாக பயன்படுத்தப்படும் முறைகளில் தனிப்பட்ட பண்ணை பார்வைகள், குழு பயிற்சி நிகழ்ச்சிகள், விளக்கப் பண்ணைகள் மற்றும் கைபேசி அடிப்படையிலான ஆலோசனை சேவைகள் அடங்குகின்றன. தனிப்பட்ட பண்ணை பார்வைகள் இடத்திற்கேற்ப தொழில்நுட்ப வழிகாட்டலை வழங்குகின்றன; அதே நேரத்தில், குழு பயிற்சிகள் மற்றும் விளக்க நிகழ்ச்சிகள் அறிவுப் பகிர்வு மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை ஆதரிக்கின்றன. விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் மேலாண்மை நடைமுறைகள் குறித்த தகவல்களை பரப்புவதற்காக கைபேசி அடிப்படையிலான ஆலோசனைகள் பயன்படுத்தப்படுகின்றன. கால்நடை மருத்துவ மற்றும் விரிவாக்க சேவைகள் அதிகாரப்பூர்வ பணிநேரங்களில் வழங்கப்படுகின்றன; மாவட்ட அலுவலகங்கள்   காலை 9.00 மணி முதல் செயல்படுவதன் மூலம், விவசாயிகள் தொழில்நுட்ப ஆதரவைப் பெறுவதற்கு உறுதிப்படுத்தப்படுகிறது.

விவசாயிகளுடன் தொடர்பு கொள்ளும் நடவடிக்கைகள் தினசரி பண்ணை பார்வைகள் மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள் மூலமாக நடைபெறுகின்றன. இதற்கு மேலாக, உள்ளூர் சூழ்நிலைகளைப் பொறுத்து, சில பிரிவுவாரியான அலுவலகங்கள் திட்டமிடப்பட்ட கூட்டங்கள் மற்றும் தொடர்ச்சி பண்ணை பார்வைகள் மூலம் வாராந்திர அடிப்படையில் விவசாயிகளுடன் தொடர்பு கொள்கின்றன.

கால்நடை விரிவாக்க நடவடிக்கைகள் தனியார் பால் நிறுவனங்கள் (MILCO), விவசாயி அமைப்புகள் மற்றும் அரசாங்கத்துக்கு அற்ற அமைப்புகள் (NGOs) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படுகின்றன. இக்கூட்டாண்மைகள் தொழில்நுட்ப உதவி, பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் விவசாயிகளின் பங்கேற்பை எளிதாக்குதல் ஆகியவற்றின் மூலம் விரிவாக்க சேவை வழங்கலை ஆதரிக்கின்றன.

கால்நடை விரிவாக்கத் துறையில் எதிர்கொள்ளும் சவால்கள்

  • பணியாளர் பற்றாக்குறை
    தொழில்நுட்ப மற்றும் ஆதரவு பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக கால்நடை விரிவாக்க சேவை வழங்கல் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் தற்போதுள்ள அதிகாரிகளின் பணிச்சுமை அதிகரித்து, பண்ணைகளை பார்வையிடல்,  தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளின் வினைத்திறன் குறைகிறது. போதிய மனிதவள வசதிகள் இல்லாததால், பிரிவுவாரியான பகுதிகளில் விரிவாக்க நடவடிக்கைகளின் பூர்த்தி மற்றும் செயல்திறன் குறைகின்றன
  • அடிப்படை வசதி குறைபாடுகள்
    போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, அதாவது தேவையான உபகரணங்கள் இல்லாத அலுவலகங்கள் மற்றும் குறைந்த கள வசதிகள், விரிவாக்க சேவைகளின் செயல்திறனை எதிர்மறையாக பாதிக்கின்றன. இத்தகைய கட்டுப்பாடுகள் சமூக மட்டத்திலான பயிற்சிகள், விளக்க நிகழ்ச்சிகள் மற்றும் விவசாயிகளுக்கான கூட்டங்களை அமைத்து நடத்துவதற்கான அதிகாரிகளின் திறனை கட்டுப்படுத்துகின்றன.
  • நிதி பற்றாக்குறை
    பண்ணைகளை பார்வையிடல், கால்நடை விவசாயிகளுக்கான பயிற்சிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கான செலவுகள் பாதிக்கப்படுகின்றன.
  • போக்குவரத்து சிக்கல்கள்
    வாகனங்களின் பற்றாக்குறை மற்றும் குறைந்த எரிபொருள் ஒதுக்கீடு காரணமாக, தொலைதூர கால்நடை பண்ணை பகுதிகளை அடைவதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இதனால் பண்ணைகளை பார்வையிடல் குறைவடைவதுடன், சேவை வழங்கல் தாமதமடைகிறது.
  • தகவல் தொழில்நுட்ப அணுகல் குறைவு
    தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்களுக்கு போதிய அணுகல் இல்லாமை காரணமாக ஆலோசனை சேவைகள், தரவு மேலாண்மை மற்றும் விவசாயிகளுடன் தொடர்பு கொள்ளும் செயல்பாடுகளுக்கான டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு என்பன கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் விரிவாக்க சேவை வழங்கலின் செயல்திறன் குறைகிறது.
  • விவசாயி பங்கேற்பு குறைவு
    பணிச்சுமை மற்றும் போட்டியிடும் வாழ்வாதார நடவடிக்கைகள் காரணமாக பயிற்சிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை
  • உள்ளீடுகள் மற்றும் சேவை குறைபாடுகள்
    கால்நடைக்கான மருந்துகள் மற்றும் பிற உள்ளீடுகள் குறைந்தளவில் கிடைப்பது சேவையின் தரத்தை பாதிக்கிறது. இதன் காரணமாக அதிகாரிகள் பல்வேறு நேரங்களில் நேரடி சிகிச்சையை வழங்குவதற்கு பதிலாக மருந்து சீட்டுகள் வழங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், விலங்குகளின் ஆரோக்கியம் தொடர்பான தலையீடுகளின் உடனடி செயல்திறன் குறைகிறது.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொலைதூர மற்றும் பின்தங்கிய விவசாய சமூகங்களுக்கு சேவை வழங்கும் திறனை கட்டுப்படுத்தும் முக்கிய தடைகளாக போக்குவரத்து கட்டுப்பாடுகள், பணியாளர் பற்றாக்குறை மற்றும் தொடர்பாடல் சவால்கள் காணப்படுகின்றன; இவை தொலைதூர மற்றும் பின்தங்கிய விவசாய சமூகங்களுக்கு நடைபெறும் முறையான வெளிச்சேர்க்கை நடவடிக்கைகளை குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்துகின்றன. இத்தகைய கட்டுப்பாடுகள் கள பார்வைகளின் வினைத்திறனை குறைப்பதுடன், கால்நடை விரிவாக்க மற்றும் கால்நடை மருத்துவ சேவைகளை நேரத்திற்குள் வழங்குவதையும் கட்டுப்படுத்துகின்றன.

சேவைகள் மற்றும் விவசாயிகளின் தேவைகளுக்கிடையிலான இடைவெளிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வழங்கப்படும் கால்நடை விரிவாக்க சேவைகள், பால் மாடு மற்றும் ஆடு வளர்ப்பாளர்களின் தேவைகளை பகுதியளவிலேயே பூர்த்தி செய்கின்றன. குறைந்த போக்குவரத்து வசதிகள் மற்றும் போதிய வளங்கள் இல்லாமை காரணமாக சேவை வழங்கல் கட்டுப்படுத்தப்படுகின்றது; இதனால் திட்டமிட்ட அட்டவணைகளின் படி அதிகாரிகள் பண்ணைகளை பார்வையிட முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக, கிடைக்கும் வளங்களுக்கு ஏற்ப விரிவாக்க நடவடிக்கைகள் அடிக்கடி மாற்றியமைக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகி, விவசாயிகளின் தேவைகள் மற்றும் வழங்கப்படக்கூடிய ஆதரவின் மட்டத்திற்கிடையே இடைவெளிகள் உருவாகின்றன.

விவசாயிகள் செயற்கை கருவூட்டல், தீவன மேலாண்மை நடைமுறைகள், தடுப்பூசி நடவடிக்கைகள் மற்றும் நோய் கட்டுப்பாடு தொடர்பான வழிகாட்டல்களை அடிக்கடி நாடுகின்றனர். எனினும், வளங்களின் குறைபாடு மற்றும் கள பரப்பளவு கட்டுப்பாடுகள் காரணமாக இத்துறைகள் தொடர்ச்சியாக கவனிக்கப்படுவதில்லை. மேலும் பண்ணைகளை பார்வையிடல் குறைவாக இருப்பது, போதிய தொழில்நுட்ப ஆதரவு இல்லாமை மற்றும் பயிற்சிகளில் உள்ள இடைவெளிகள் ஆகியவை, மேம்படுத்தப்பட்ட இனப்பெருக்க மற்றும் பராமரிப்பு நடைமுறைகளை விவசாயிகள் முழுமையாக செயல்படுத்துவதில் தடையாக இருந்து, விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் குறைவான நிலைக்கு வழிவகுக்கின்றன.

கூடுதலாக, கால்நடை மருத்துவ சேவைகள் பல நேரங்களில் நேரடி சிகிச்சைக்கு பதிலாக மருந்து சீட்டுகள் மட்டுமே வழங்குகின்றன என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தலையீடுகளின் செயல்திறன் குறைவதுடன், நேரத்திற்குள் வழங்கப்படும் விலங்கு ஆரோக்கிய பராமரிப்பு குறித்த அவர்களின் எதிர்பார்ப்புகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்படுவதில்லை.

விரிவாக்க பணியாளர்கள் பொதுவாக தங்களது கடமைகளை நிறைவேற்ற தேவையான பயிற்சிகள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெறுகின்றனர். இருப்பினும், வாகனங்கள் இல்லாமை, குறைந்த எரிபொருள் ஒதுக்கீடு, ஓட்டுநர்கள் இல்லாத நிலை மற்றும் கால்நடை மருந்துகளின் பற்றாக்குறை போன்ற போதிய வளங்கள் இல்லாத காரணத்தால், போதுமான தொழில்நுட்ப அறிவு இருந்தபோதிலும் சேவைகளை திறம்பட வழங்குவதில் அவர்கள் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

உத்திகள் மற்றும் மேம்பாட்டு பரிந்துரைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில், கால்நடை விரிவாக்க சேவை வழங்கல், அரசுப் பயிற்சி மையங்கள் (உதா: கல்லடி பயிற்சி மையம்) மூலமாக மேற்கொள்ளப்படும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் PSDEN (மாநில திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் வலையமைப்பு) அமைப்புடன் இணைந்து செயல்படுவதன் மூலம் முக்கியமாக வலுப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டங்களில், விரிவாக்க பணியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், பயிற்சி நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் (DAPH) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட தொழில்நுட்ப வழிகாட்டுதல்களைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்குகின்றன. மாவட்டத்தில் பால் மாடு மற்றும் ஆடு உற்பத்தியை ஆதரிப்பதற்காக, தற்போது உள்ள வளக் கட்டுப்பாடுகளின் வரம்புக்குள் சேவை வழங்கலின் செயல்திறனை மேம்படுத்துவதில் இந்த முயற்சிகள் கவனம் செலுத்துகின்றன.

விரிவாக்க பணியாளர்கள், டிஜிட்டல் தளங்கள் அல்லது விவசாயி களப் பள்ளிகள்  போன்ற சர்வதேச மாதிரிகள் அல்லது புதுமைகள் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். விரிவாக்க நடவடிக்கைகள் பெரும்பாலும் மாவட்ட மட்ட DAPH அறிக்கைகளில் பிரதிபலிப்பதுபோல்,  தற்போதுள்ள துறைசார் விரிவாக்க மாதிரிகளையே பின்பற்றுகின்றன. மேலும், சமீப ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென சர்வதேச அளவிலான முன்னோடி (pilot) திட்டங்கள் அல்லது வெளிப்புறமாக அறிமுகப்படுத்தப்பட்ட விரிவாக்க மாதிரிகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை.

கால்நடை விரிவாக்க சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, கைபேசி அடிப்படையிலான ஆலோசனை சேவைகளை அறிமுகப்படுத்துதல், கள அதிகாரிகளுக்கான சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்குதல் மற்றும் விவசாயி பயிற்சி மற்றும் விழிப்புணர்விற்காக பல்லூடக (multimedia) கருவிகளை பயன்படுத்துதல் அவசியமாகிறது. அத்துடன் விரிவாக்க அதிகாரிகளுக்கான கூடுதல் பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல், பொது–தனியார் கூட்டாண்மைகளை ஊக்குவித்தல் மற்றும் முறையான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு செயல்முறைகளை நிறுவுதல் ஆகியவையும் சேவை வழங்கலை மேம்படுத்தவும், விவசாயிகளின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யவும் முன்மொழியப்படுகின்றன.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விரிவாக்க பணியாளர்கள், கால்நடை விரிவாக்க சேவைகளை வலுப்படுத்துவதற்கும், பால் மாடு மற்றும் ஆடு உற்பத்தியில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்கும் நோக்கமுடைய தொடர்ச்சி கலந்துரையாடல்கள் மற்றும் பணிமனைப் பயிற்சிகளில் (workshops) பங்கேற்கத் தயாராக இருப்பதை தெரிவித்துள்ளனர்.

முடிவுரை –

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற குழு கலந்துரையாடல், பால் மாடு  மற்றும் ஆடு வளர்ப்பாளர்களுக்கு ஆதரவளிப்பதில் கால்நடை விரிவாக்க சேவைகள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. எனினும், பல்வேறு கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு சவால்கள் அவற்றின் செயல்திறனை கட்டுப்படுத்துகின்றன. பணியாளர் பற்றாக்குறை, குறைந்த போக்குவரத்து வசதிகள், நிதி பற்றாக்குறை,  போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை மற்றும் கால்நடை மருந்துகளின் பற்றாக்குறை ஆகியவை, முறையான பண்ணை பார்வைகள், நேரத்திற்குள் சேவை வழங்கல் மற்றும் விவசாயிகளுடன் திறம்பட ஈடுபடுதல் ஆகியவற்றை குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்துகின்றன. இதன் விளைவாக, தற்போதுள்ள சேவைகள் கால்நடை விவசாயிகளின் பல்வகை மற்றும் அதிகரித்து வரும் தேவைகளை பகுதியளவிலேயே பூர்த்தி செய்கின்றன.

இந்தக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், விரிவாக்க அதிகாரிகள் சேவை வழங்கலில் உறுதியாக இருந்து வருகின்றனர்; மேலும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் வழங்கிய தொழில்நுட்ப பயிற்சிகள் மற்றும் நிறுவன வழிகாட்டல்களால் அவர்கள் பயன் பெற்றுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் விரிவாக்க சேவைகளை வலுப்படுத்துவதற்கு, இயக்கத்திறன் (mobility), டிஜிட்டல் ஆலோசனை அமைப்புகள், பல்மாதிரி அடிப்படையிலான பயிற்சி கருவிகள் மற்றும் வலுவான பொது–தனியார் கூட்டாண்மைகளில் குறிவைத்த முதலீடுகள் அவசியமாகின்றன. மேலும், விவசாயி பங்கேற்பை அதிகரித்தல், உள்ளீடுகளுக்கான அணுகலை மேம்படுத்தல் மற்றும் முறையான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு செயல்முறைகளை நிறுவுதல் ஆகியவையும் சேவையின் தரத்தையும் தாக்கத்தையும் மேம்படுத்துவதற்கு முக்கியமானவையாகும்.

மொத்தமாக, இந்தக் கண்டறிதல்கள், வளங்களுக்கு பற்றாக்குறையற்ற, தொழில்நுட்ப ஆதரவுள்ள மற்றும் விவசாயிகள் மையப்படுத்தப்பட்ட கால்நடை விரிவாக்க அமைப்பு ஒன்றின் தேவையை வலியுறுத்துகின்றன. அடையாளம் காணப்பட்ட இடைவெளிகளை சரிசெய்வதன் மூலம், மட்டக்களப்பு மாவட்டத்தில் பால்  மாடு  மற்றும் ஆடு உற்பத்தித்திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் நிலையான கால்நடை வளர்ச்சி, கிராமப்புற வாழ்வாதார மேம்பாடு மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய பரந்த தேசிய இலக்குகளுக்கும் பங்களிப்பு செய்ய முடியும்.

Recommended For You

About the Author: Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *