- யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுத் தேவைகளில் 89% ஐ 2023 இறுதியில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ் சத்யானந்த.
- கடந்த அரசாங்கங்களால் பூர்த்தி செய்யப்படாமல் இருந்த அனைத்து வீட்டுத் திட்டங்களின் பணிகளும் உடனடியாக முடிக்கப்படும் – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி.
- திட்டமிடல் மற்றும் முதலீட்டு அனுமதியை துரிதப்படுத்த ONE STOP UNIT ஆரம்பிக்கப்பட்டுள்ளது – நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத்.
- ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படவேண்டியிருந்த 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலுத்தப்பட்டுள்ளது – நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆர். எச் ருவினிஸ்.
“கந்துகர தசகய” பத்து சிறப்பு ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 97 பிரதேச செயலகங்களில் 14,088 வேலைத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக இவ்வருடம் 9,622 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ் சத்யானந்த தெரிவித்தார்.
மேலும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுத் தேவைகளில் 89 வீதமானவை 2023 இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தமான மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தில் இதுவரை 275,127 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ்.சத்தியானந்த இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ்.சத்தியானந்த,
”நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் முக்கிய துறைகள் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகள் ஆகும். 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள், யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு 151,662 வீடுகளை எமது அமைச்சு நிர்மாணித்துள்ளது.
உள்நாட்டு நிதிக்கு மேலதிகமாக, இந்திய உதவிகள், உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதரவுடன் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. இதன்படி, யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களின் வீட்டுத் தேவைகளில் 89% பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
மொத்தமான மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தின்படி, இதுவரை மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 275,127 ஆகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த ஆண்டு, மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.
இந்த நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி இந்த ஆண்டு, இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் வீடுகளுக்கான மின்சார இணைப்புகள் வழங்கப்படும்.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுநீரக நோயின் நிலைமையைக் கருத்தில் கொண்டு 50 நனோ நீர் சுத்திகரிப்பு பிரிவுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றும் பொறுப்பு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கே உள்ளது.
23 மார்ச் 2028 ஆம் ஆண்டுக்குள், இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கில் 131,969 சதுர கிலோமீற்றர் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன், 25.09 சதுர கிலோமீற்றர் நிலக்கண்ணிவெடிகளே அகற்றப்படவேண்டி உள்ளன. அதற்காக இந்த வருடம் 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, பல சிறப்புத் திட்டங்கள் நமது அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றன. மேல் மாகாண பெருநகர பிரதான திட்டம், கிழக்கு மாகாண மூலோபாய சுற்றுலா வலய அபிவிருத்திக்கான பிரதான திட்டம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் பிரதான அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்தல், நிலைபேறான சுற்றுலா அபிவிருத்தி நகர அபிவிருத்தித் திட்டம், கொழும்பு நகர புத்துயிர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் திட்டம் மற்றும் அனுராதபுர ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தித் திட்டம் ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும்.
மேலும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் கொழும்பு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இவற்றில், ஜனாதிபதியின் விசேட கவனத்தைப் பெற்ற “கந்துகர தசகய” விசேட ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்காக இவ்வருடம் பத்தாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், 97 பிரதேச செயலகப் பிரிவுகளில் 14,088 வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டங்களுக்காக 9,622 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் விடுவிக்கப்பட்டுள்ளது.” என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ்.சத்தியானந்த தெரிவித்தார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாரச்சி,
”கடந்த காலங்களில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் தொற்று காரணமாக பின்னடைவைச் சந்தித்தன. எனினும் கடந்த 02 வருடங்களில் 18,123 பயனாளி குடும்பங்களுக்கு 10,288 மில்லியன் ரூபா வீடமைப்பு உதவியாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 16,670 குடும்பங்கள் தங்களுடைய வீட்டுக் கனவை நனவாக்கி உள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு 52.05 மில்லியன் ரூபா பெறுமதியான வீடமைப்பு உதவிகளையும் வழங்கியுள்ளோம்.
மேலும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட வீட்டு திட்டத்தின் கீழ் 2,072 வீடுகள் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு, அதில் 732 வீடுகள் முழுமையாக கட்டப்பட்டுள்ளன. இதற்காக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு, இந்திய அரசாங்கம் 1,244 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
மேலும், குறைந்த வட்டியிலான கடன் திட்டத்தின் கீழ் 13,405 குடும்பங்களுக்கு 5,234 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 13,197 குடும்பங்களுக்கான வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, 150 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட மாதாந்த மீள் அறவீட்டுத் தொகையை 310 மில்லியன் ரூபாவாக உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் கீழ் அதிகளவான வீட்டுக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், 12% மாதாந்த வட்டியில் கடன் வழங்க 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது திறைசேரியில் இருந்து ஒதுக்கப்பட்டிருக்கும் 2,000 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக ஒதுக்கப்பட்ட நிதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2024ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையின் படி வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு வீட்டு உரிமைகளை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் கொழும்பு மாநகரசபையில் 1,070 குடும்பங்களுக்கு வீட்டு உறுதிகள் வழங்கப்படவுள்ளன. அதேபோல் யாழ்ப்பாணம் குரு நகர் வீடமைப்புத் திட்டத்தின் 160 குடும்பங்களுக்கும் வீட்டு உறுதிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. அத்தோடு, 742 வீடுகளுக்கான உறுதிப் பத்திரங்களும் வழங்கப்படவுள்ளன.
1979 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் தேர்தல் இல்லங்கள் – 10 , தேர்தல் இல்லங்கள் – 20 , உதகம்மன, மாதிரிக் கிராமங்கள் போன்ற திட்டங்களில் வீடுகள் பெற்றுக்கொடுக்கப்பட்ட போதிலும் அவர்களிலும் வீட்டின் உறுதிகள் கிடைக்கப்பெறாத 32,000 பேருக்கு உறுதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2015 – 2019 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட 07 வீடமைப்புத் திட்டங்களின் கீழ் முழுமைப்படுத்தப்படாத 44,053 வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்காக 15,244 மில்லியன் ரூபா நிதி திறைசேரியிடம் கோரப்பட்டுள்ளது. அந்த நிதி கிடைத்தவுடன் வீடுகளின் நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்படும்.
இதுவரை எந்த அரசாங்கத்தாலும், அமைச்சராலும் ஆரம்பிக்கப்பட்ட ஆனால் இதுவரை பூர்த்தி செய்யப்படாத சகல வீட்டுத் திட்டங்களையும் பூர்த்தி செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாரச்சி தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத்,
”நாட்டின் நகர்ப்புறங்களில் சூழலை முகாமைத்துவம் செய்வதே நகர அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பாகும். கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இடையில் நிறுத்தப்பட்ட 22 திட்டங்களின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த 22 திட்டங்களுக்காக திறைசேரி 1,900 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
மேலும், திட்டங்கள் மற்றும் முதலீடுகளுக்கு அனுமதியளிப்பதை விரைவுபடுத்தும் நோக்கில் விரைவு சேவை பிரிவு (ONE STOP UNIT) தொடங்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டளவில் இலங்கையின் அனைத்து நகர அபிவிருத்தி எல்லைககளுக்குள்ளும், இந்த Online முறையை நடைமுறைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
மேலும், நகர்ப்புற அபிவிருத்தி பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 276 பகுதிகளுக்கு பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் ஆகிய ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 87 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், இவ்வருடம் 26 அபிவிருத்தித் திட்டங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளன. எதிர்வரும் ஆண்டுகளில் 22 அபிவிருத்தித் திட்டங்கள் என்ற அடிப்படையில் வர்த்தமானியில் அறிவிக்கப்படும்.
மேலும், நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் பெறுவோருக்கு 22 வீட்டுத் திட்டங்களில் 13,814 வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டு, 11,967 குடும்பங்கள் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளன. இதன்கீழ் 116 ஏக்கர் நிலப்பரப்பை நகர அபிவிருத்தி அதிகாரசபை மீள் அபிவிருத்தி செய்ய முடிந்தது.
அத்துடன், கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த 06 வீட்டுத் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கொழும்பகே மாவத்தை, அப்பிள் தோட்டம், ஸ்டேடியம் கிராமம், மாதம்பிட்டிய வீதி, பெர்குசன் வீதி மற்றும் ஒபேசேகரபுர ஆகிய இடங்களில் 4,074 வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், 552 மில்லியன் யுவான் சீன உதவித் தொகையில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக 1696 வீடுகள் நிர்மாணிக்கும் பணி இந்த ஆண்டு செப்டம்பரில் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிகாரசபையானது நாட்டிற்கு முதலீடுகளை கொண்டுவருவதற்கான விசேட வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்துள்ளது. இங்கு விசேட திட்டமாக யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மாளிகையை தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையை பொழுதுபோக்கு மையமாக அபிவிருத்தி செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவித்தார்.
நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆர்.எச். ருவினிஸ்
”நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை இதுவரை பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களுக்காக 200 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை நிர்மாண ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கியுள்ளது. மேலும், அந்த திட்டங்களை மீண்டும் தொடங்கும் வகையில் இதுவரை இடை நிறுத்தப்பட்டிருக்கு பல சிறப்பு திட்டங்களுக்கு பணம் செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அத்துடன், நிர்மாண ஒப்பந்ததாரர்களின் பதிவு தாமதக் கட்டணம் அறவிடப்படாமல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய நிர்மாண சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்ய முடியாது போன ஒப்பந்தக்காரர்களுக்கும் மீள் பதிவு செய்ய வாய்ப்பளிக்கும் வகையில் 03 வருட காலத்திற்கு சிறு மற்றும் மத்திய தர ஒப்பந்தாகாரர்கள் ( C4 – C9) தாமதக் கட்டணத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 7,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு NVQ தகமைகளை வழங்குதல், நிர்மாணத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் போன்ற பல சாதகமான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம் என்று நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவித்தார்.
இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரன் பாலசூரிய,
”இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 2,190 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை 843.91 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதன் கீழ், 4 முக்கிய விடயப் பரப்புக்களின் கீழ் 31 திட்டங்கள் செயல்படுத்துகின்றன.
கால்வாய்கள், ஏரிகள் மற்றும் நடைபாதை பராமரிப்புத் திட்டத்தின் கீழ் கொழும்பு தலைநகர வலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காணப்படும் பிரதான கால்வாய்களில், 44 கிலோற்றர் பிரதான கால்வாய்கள், 52 கிலோமீற்றர் இரண்டாம் நிலைக் கால்வாய்கள் மற்றும் 22 கிலோமீற்றர் நீளமான ஹெமில்டன் கால்வாய் பராமரிப்பு, வௌ்ள நீர் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாதிவெல தெற்கு திசை திருப்பும் திட்டம், கழு பாலம திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட Gate Mounted Pump திட்டம் உள்ளடங்களாக 9 பிரதான திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.
மேலும், சதுப்பு நிலம் மற்றும் தாழ்நில மேம்பாடு, வடிவமைப்பு வேலை, வரைபடமாக்கல் மற்றும் சாத்தியக்கூறு ஆய்வு ஆகிய இரண்டு துறைகளின் கீழ் 9 திட்டங்கள் நடந்து வருகின்றன என்று இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரன் பாலசூரிய தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதிநிதிகள் குழுவொன்று கலந்துகொண்டது.