புவி வெப்பமயமாதல் உலகில் பேரழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அதீத வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட மோசமான மாற்றங்கள் நிலவி வருகின்றன.
பருவநிலை மாற்றம் என்றால் என்ன?
பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ்.ஆனால் அது கடந்த காலங்களில் குறைவாகவும், அதிகமாகவும் இருந்து வந்துள்ளது.
பருவநிலையில் இயற்கையாகவே மாற்றங்கள் இருந்து வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை முன்னெப்போதுமில்லாத வகையில் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சூரியனின் ஆற்றலில் குறிப்பிட்ட பங்கை பூமியின் வளிமண்டலம் எவ்வாறு உட்கிரகித்து கொள்கிறது என்பதை விளக்கும் பசுமை இல்ல விளைவுடன் இது இணைத்து பார்க்கப்படுகிறது.
பூமியின் நிலப்பரப்பிலிருந்து மீண்டும் விண்வெளிக்கு திரும்ப அனுப்பப்படும் சூரியனின் ஆற்றல், பூமியின் வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களால் உறிஞ்சப்பட்டு அனைத்து திசைகளிலும் மீண்டும் உமிழப்படுகிறது.
இதன் காரணமாக, பூமியின் வளிமண்டலத்தை ஒட்டிய பகுதிகள் மட்டுமின்றி, பூமியிலுள்ள நிலப்பரப்பின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது. இந்த செயல்முறை மட்டும் தொடர்ந்து நடைபெறவில்லை என்றால், பூமியின் வெப்பநிலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் எதுவும் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும்.
இயற்கையாக சூரிய ஆற்றலை கொண்டு பூமியின் வளிமண்டலத்தில் நடக்கும் செயல்முறையோடு, பூமியின் நிலப்பரப்பில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்தின் மூலம் வெளியிடப்படும் வாயுக்களும் கூடுதலாக இணைந்து அதிகளவிலான ஆற்றல், பசுமை இல்ல விளைவின்போது சிதறடிக்கப்படுவதால் பூமியின் வெப்பநிலை உயருவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மேற்காணும் இந்த அசாதாரண மாற்றத்துக்கே பருவநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமயமாதல் என்று பெயர்.
பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன?
வெப்பமயமாதலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது நீராவிதான். எனினும் அது வளிமண்டலத்தில் சில நாட்கள் மட்டுமே நிலைத்திருக்கும்.
ஆனால், கரியமில வாயு (CO2) மிக நீண்ட காலத்திற்கு வளிமண்டலத்தில் தங்கியிருக்கும். தொழில்துறைக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தது போன்ற நிலைக்கு பூமியின் வளிமண்டலம் திரும்புவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அதுவும், இந்த மாற்றத்திற்கு பெருங்கடல்கள் போன்ற இயற்கை நீரியல் அமைப்புகளால் மட்டுமே வித்திட முடியும்.
மனிதர்களால் ஏற்படுத்தப்படும் கரியமில வாயு வெளியேற்றத்திற்கு பெரும்பாலும் புதைபடிவ எரிபொருள்களை எரிப்பதே காரணமாக உள்ளது. வளிமண்டலத்தில் காணப்படும் கரியமில வாயுக்களை உறிஞ்சக்கூடிய பூமியிலுள்ள காடுகள் அழிக்கப்படும்போது, அவற்றில் ஏற்கனவே உட்கிரகிக்கப்பட்டிருந்த கார்பனும் வெளியிடப்பட்டு, அது புவி வெப்பமயமாதலுக்கு வழிவகுக்கிறது.
தொழிற்புரட்சி தொடங்கிய 1750களில் இருந்து, இதுவரை 30 சதவீதத்துக்கும் அதிகமாக கரியமில வாயுவின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது கரியமில வாயுக்களின் செறிவு வளிமண்டலத்தில் அதிகரித்துள்ளது.
மற்ற பசுமை இல்ல வாயுக்களான மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு உள்ளிட்டவையும் மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக அதிக அளவில் வெளியிடப்பட்டு வந்தாலும், கரியமில வாயுவுடன் ஒப்பிடும்போது அது மிகவும் குறைவே.
பருவநிலை மாற்றத்திற்கான ஆதாரம் என்ன?
தொழிற்புரட்சி பரவலாவதற்கு முன்னதாக இருந்ததை விட தற்போது பூமியின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக உலக வானிலை மையம் கூறுகிறது.
பூமியின் மிகவும் வெப்பம் மிக்க ஆண்டுகளின் பட்டியலில் முதல் 20 இடங்களை, கடந்த 22 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஆண்டுகளே ஆக்கிரமித்துள்ளன. 2015 முதல் 2018 வரையிலான நான்கு ஆண்டுகளும் அதில் அடக்கம்.
2005 முதல் 2015 வரையிலான பத்தாண்டு காலத்தில் உலகம் முழுவதும் கடல் நீரின் மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 3.6 மில்லி மீட்டர் என்ற கணக்கில் அதிகரித்துள்ளது.
நீரின் வெப்பநிலை அதிகரிக்க, அதிகரிக்க அதன் பரும அளவு அதிகரிப்பதே இதுபோன்ற மாற்றங்களுக்கு மிகப் பெரிய காரணமாக உள்ளது.
இருப்பினும், பனிப்பாறைகள் உருகுவதே கடல்நீர் மட்ட உயர்வுக்கு முக்கிய காரணமாக தற்போது பார்க்கப்படுகிறது. துருவ பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலுள்ள பனிப்பாறைகள் அதிகளவில் உருகி வருகின்றன.
1979 முதல் இதுவரையிலான காலகட்டத்தில் துருவ பகுதியில் உள்ள கடலில் உள்ள பனிப்பாறைகளின் இருப்பில் கடுமையான வீழ்ச்சி காணப்படுகிறது.
மேற்கு அண்டார்டிக்காவில் பனிக்கட்டிகள் உருகி வருவதையும் செயற்கைக்கோள் தரவு காட்டுகிறது. சமீபத்திய ஆய்வில் கிழக்கு அண்டார்டிகாவும் தனது பனிப்பாறைகளை இழக்கத் தொடங்கியிருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாறிவரும் காலநிலை ஏற்படுத்தும் தாக்கங்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளிலும் காணப்படுகின்றன. தாவரங்கள் முன்னதாகவே பூ விடுவது மற்றும் பழம் விளையும் பருவம்/ காலம் மற்றும் விலங்குகளின் வாழிடங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
எதிர்காலத்தில் வெப்பநிலை எவ்வளவு உயரும்?
1850ஆம் ஆண்டு முதல் 21ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலான காலத்தில் பூமியின் தரைப்பகுதி வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரி செல்சியஸை தாண்டும் என்றே பெரும்பாலான பாவனையாக்கல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தற்போது நிலவி வரும் சூழ்நிலை தொடரும் பட்சத்தில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளேயே வெப்பநிலை 3-5 செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என்று உலக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
பூமியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பது மிகவும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று நீண்டகாலமாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது அதை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்துவதே பாதுகாப்பான நடவடிக்கையாக இருக்கும் என்று விஞ்ஞானிகளும், கொள்கை வகுப்பாளர்களும் தெரிவிக்கின்றனர்.
1.5 டிகிரி செல்சியஸ் என்னும் இலக்கை எட்டுவதற்கு “சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் விரைவான, தொலைநோக்கு பார்வையுடன் கூடிய மாற்றங்கள்” தேவைப்படும் என்று 2018ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு குழு (ஐபிசிசி) தனது அறிக்கை ஒன்றில் பரிந்துரைத்தது.
பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அரசியல் ரீதியான நடவடிக்கையின் மூலம் குறைப்பதற்குரிய முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டை உடனடியாக மிகப் பெரிய அளவில் குறைத்தாலும், அவற்றின் தாக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், பூமியின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் இயற்கையின் மூலங்களான நீர் அமைப்புகள், பனிக்கட்டிகள் ஆகியற்றில் பிரதிபலிப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அதே போன்று, பூமியின் வளிமண்டலத்தில் குவிந்துள்ள கரியமில வாயுக்கள் நீங்குவதற்கு பல தசாப்தங்கள் ஆகும்.
பருவநிலை மாற்றம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
மாறி வரும் காலநிலையால் எவ்வளவு பெரிய தாக்கங்கள் ஏற்படும் என்ற கேள்விக்குரிய பதில் நிச்சயமற்றதாகவே உள்ளது.
நன்னீர் பற்றாற்குறை, உணவு உற்பத்தி தட்டுப்பாடு, வெள்ளம், புயல்கள் மற்றும் வெப்ப அலைகளின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பது போன்ற வகைகளில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் இருக்கக் கூடும். அதிதீவிரமான வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை பருவநிலை மாற்றத்தின் காரணமாக அதிகரிக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டாலும், அவற்றை தற்போது நிலவும் சம்பவங்களோடு தொடர்பு படுத்தி கூறுவது சிக்கலான காரியமாகவே உள்ளது.
உலகம் மென்மேலும் சூடானால், நீர் நீராவியாவதன் அளவு அதிகரித்து, அதன் காரணமாக காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். இதன் காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் அதிதீவிர மழையும், சில பகுதிகளில் பனிப்பொழிவும் புதிய இயல்பாக உருவெடுக்கக் கூடும். அதே சமயத்தில், கடற்கரையை ஒட்டி அமையாத பகுதிகளில் கோடைகாலத்தின்போது, வெப்பநிலை அதிகரித்து வறட்சிக்கு வித்திடும் சூழ்நிலை ஏற்படக்கூடும்.
புயல்களின் காரணமாக ஏற்படும் மழையால் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் கடலில் கலந்து, அதன் நீர்மட்டம் உயர வழிவகுக்கும். இதுபோன்ற அசாதாரணமான இயற்கையின் கோரத்தாண்டவங்களை எதிர்கொள்வதற்குரிய செயல் திட்டம் இல்லாத ஏழை நாடுகள், இதனால் கடுமையாக பாதிக்கப்படக் கூடும்.
புதிய வாழிடத்துக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்வதற்கு முன்னரே அடுத்த இடத்துக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் இதன் காரணமாக அழியும் நிலைக்கு தள்ளப்படக் கூடும்.
மலேரியாவின் வேகமான பரவல், நீர் மூலம் பரவும் நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உடல்நிலை பாதிக்கப்பட கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தில் கரியமில வாயுக்களின் அளவு அதிகரிப்பதால், கடல்கள் உறிஞ்சும் கரியமில வாயுக்களின் அளவும் அதிகரிக்கும். இந்த மாற்றத்தின் காரணமாக கடல் நீரில் அமிலத்தன்மை உயர்ந்து, அங்குள்ள பவளப் பாறைகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கும்.
புவி வெப்பமயமாதலால் ஏற்படும் மாற்றங்களால் மென்மேலும் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும். இதன் காரணமாக, உயர்ந்த மலைகளிலுள்ள நிரந்தர பனிப்பாறைகள் உருகும்.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளே இந்த நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும்.
BBC.COM