நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் 2040 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கும் இலங்கை உறுதிபூண்டுள்ளது

  • நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் தெற்காசியாவில் இலங்கை முன்னணி நாடாக இருக்க வேண்டும்.
  • காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவத் தேவையான சட்டம் அடுத்த வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளப்படும் – ஜனாதிபதி.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்களைப் பயன்படுத்துதல், விவசாயத்தை நவீனப்படுத்துதல் மற்றும் நீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்குதல் போன்ற துரித முறைகள் மூலம் 2040 ஆம் ஆண்டளவில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கும் இலங்கை செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்காக வர்த்தக முதலீடுகள் ஊடாக உலகளாவிய நிதி வசதிகளை ஈர்ப்பதுடன், பெருந்தோட்டத் துறையை பெருந்தோட்டத் தொழிலில் இருந்து விவசாய வணிகமாக மாற்றுவது, நிலையான சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு மற்றும் உற்பத்திகளை மேம்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் என்பன இதன் பிரதான வேலைத் திட்டங்களாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் இன்று (06) முற்பகல் ஆரம்பமான 2024 ஆம் ஆண்டுக்கான சுற்றாடல், சமூக மற்றும் ஆளுகை (ESG) மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

‘பிரகாசமான எதிர்காலத்திற்கான நிலையான பாதை’ என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு பல்கலைக்கழக வணிக நிர்வாக முதுகலை பட்டதாரிகளின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு நாள் முழுவதும் நடைபெற்றது.

சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை ஆகிய துறைகளில் சுமார் 15 நிபுணர்கள் தமது அறிவையும் புரிதலையும் புத்தாக்க தீர்வுகளையும் இதன்போது பகிர்ந்து கொண்டனர்.

நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு சுற்றாடல், சமூக மற்றும் ஆளுகை (ESG) தொடர்பான விருதுகளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டன.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு மாநாடுகளில் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) தொடர்பில் கலந்துரையாடி வருவது தொடர்பில் முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உலகம் எவ்வாறு மாறுகிறது என்பது குறித்தும் பொருளாதாரம், சமூகம் மற்றும் நிர்வாகம் குறித்து தனியார் துறை ஆராய வேண்டும்.

மேலும் தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளிடையே நமது நாடு சிறந்த நாடு என்றே கூற வேண்டும். மாலைதீவு நம்மைப் போன்ற நாடாகும். ஆனால் அது மிகச் சிறிய நாடு. ஏனைய நாடுகள் அதற்கு தயாராக இல்லை என்று நினைக்கிறேன். எனவே நாம் இதில் முதன்மையானவராக இருக்க வேண்டும்.

இங்கு தனியார் துறையின் பங்களிப்பை நான் பாராட்டுகிறேன். இன்றைய உலகில் புவிசார் அரசியல் நிலைமை எதிர் திசையில் நகர்கிறது என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நிலையான வளர்ச்சி இலக்குகள், பெரிஸ் காலநிலை மாநாடு மற்றும் கிளாஸ்கோ மாநாடு ஆகியவை பாதியில் தடைப்பட்டுள்ளன. அதன்பிறகு நாங்கள் பெரிய அளவில் முன்னேற்றம் அடையவில்லை.

உலகம் இன்னும் COVID-19 தொற்றுநோயிலிருந்து மீண்டு வருகிறது. சீனாவின் பொருளாதாரம் இன்னும் முழு திறனுடன் செயல்படவில்லை. அதற்கு இன்னும் சில வருடங்கள் செல்லும்.. உலகின் இரண்டு முக்கிய பொருளாதாரங்கள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். ஐரோப்பா முன்னோக்கி நகர்ந்தாலும் அதில் சிக்கல்களும் உள்ளன. இந்தச் சூழலில்தான் நிலையான வளர்ச்சி இலக்குகள் மீது நாம் கவனம் செலுத்துகிறோம்.

நிலையான அபிவிருத்தி இலக்குகளை நாம் எவ்வாறு அடைவது, அவற்றிற்கு நாம் எவ்வாறு நிதியளிப்பது மற்றும் நாடுகள் அவற்றிற்கு எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்? ‘சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG)’ தொடர்பில் எவ்வாறு செயற்படலாம்? டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவானால் அது ஒரு வெளிப்படையான கேள்வியாகிவிடும்.

ஆனால் பொரிஸ் ஜான்சனின் ஆட்சியின் கீழ் இங்கிலாந்தில் நடந்தது என்பது மிகவும் வருத்தமான விடயமாகும். அவரின் தலைமையின் கீழ் கிளாஸ்கோ மாநாடு நடத்தப்பட்டதோடு அங்கு முன்வைக்கப்பட்ட கொள்கைகளுக்கு அனைவரும் உடன்பாடு தெரிவித்தனர். இரண்டு ஆண்டுகளுக்குள், தோல்வியுற்ற சீர்திருத்தங்களில் இருந்து வலதுசாரி வாக்குகளைப் பெறுவதற்காக ரிசி சுனக் அவை அனைத்தையும் மாற்றினார். இன்று இங்கிலாந்தில் ஒரு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதை மாற்ற விரும்புகிறார்கள். ஆனால் இங்கிலாந்திடம் அதற்கானநிதி இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எங்களுக்குக் கிடைக்கும் அனைத்து நிதி குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. நாம் COP 27, 28, 29 உச்சி மாநாடுகளில் இது குறித்து ஆராய்ந்தோம். எங்களுக்கு எவ்வளவு நிதி கிடைக்கும்? நாங்கள் கடன் உச்சி மாநாட்டிற்காக பாரிஸில் சந்தித்தோம், ஆனால் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையில், உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா அதிக பணத்தை செலவிட்டுள்ளது.

அந்த நிதியை இதற்குப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதற்கு ஐரோப்பா செலவிட்ட தொகையைப் பாருங்கள். ரஷ்யா எவ்வளவு பணம் செலவழித்தது என்பது எங்களுக்குத் தெரியாது. அந்த நிதியை எல்லாம் இதற்குப் பயன்படுத்தியிருக்கலாம்.. மத்திய கிழக்கிலும் இதே போன்ற நிலைதான். ஈரான் பதிலடி கொடுக்க விரும்புவதாகத் தெரிகிறது. பழிவாங்கும் தாக்குதல்கள் இலங்கை உட்பட அனைத்து நாடுகளுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்த உலகளாவிய சூழலில், இலங்கையில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு சட்டம் தயாரிக்கும் பணிகளை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்களைப் பயன்படுத்தி, விவசாயத்தை நவீனமயமாக்குதல் மற்றும் நீர் பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தணித்தல் ஆகியவற்றின் மூலம் 2040 ஆம் ஆண்டளவில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் பூஜ்ஜிய உமிழ்வு நிலையை அடைவதற்கும் இலங்கை பாடுபட்டு வருகிறது.

வணிக முதலீடுகள் மூலம் உலகளாவிய நிதி வசதிகளை ஈர்க்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். பெருந்தோட்டத் தொழிலை பெருந்தோட்டத் தொழிலில் இருந்து விவசாய வணிகமாக மாற்றுதல், நிலையான சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தித்துறையை மேம்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை பிரதான நோக்கங்களாகும். மேலும், தொழில்நுட்பக் கல்வி மற்றும் புத்தாக்கங்களுக்கு நான்கு புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எச். டி. கருணாரத்ன, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான HSBC இன் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சர்ஜெனர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வர்த்தகர்கள், தனியார் வர்த்தகத் துறையின் உயர் அதிகாரிகள், கொழும்பு பல்கலைக்கழக முதுகலைப் பட்டதாரி வர்த்தக நிர்வாக சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அறிஞர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Recommended For You

About the Author: Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *