பனை (தாவர வகைப்பாட்டியல்: Borassus, ஆங்கிலம்:Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த, தாவரப் பேரினம் ஆகும். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. பனை தமிழ்நாட்டின் மாநில மரமாகும்.
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் ஆகுமென கருதப்படுகிறது. அதன் வாழ்நாள், மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள், ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.
பெயரிடல்
பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது.புறக் காழனவே புல்லெனப் படுமே (பாடல் 630)அகக் காழனவே மரமெனப் படுமே (பாடல் 631)
பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.
ஆப்பிரிக்கப் பனை வடலி (இளம் பனை) போராசசு அத்தியோபம்
பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை
1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை
இனங்கள்
போரசசு (பனை) என்னும் பேரினத்தில் வரும்
- போராசசு அத்தியோபம் – ஆப்பிரிக்கப் பனை மரம் (Borassus aethiopum)
- போ. அகேசி – மேற்கு ஆப்பிரிக்கப் பனை (Borassus akeassii – Ake Assi`s Palmyra Palm (West Africa) )
- போ. ஃப்ளாபெல்லிபர் – ஆசியப் பனை (Borassus flabellifer – Asian Palmyra Palm (southern Asia and southeast Asia) )
- போ. என்னியனசு – நியூ கினி பனை (Borassus heineanus – New Guinea Palmyra Palm (New Guinea) )
- போ. மடகாசுகரியன்சிசு – மடகாசுகர் பனை (Borassus madagascariensis – Madagascar Palmyra Palm (Madagascar) )
- போ. சாம்பிரானென்சிசு – சாம்பிரானோ பனை (மடகாசுகர்)(Borassus sambiranensis – Sambirano Palmyra Palm (Madagascar) )
பனையுச்சி
காணப்படும் இடங்கள்
இது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது எனக் கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் எங்கெங்கு இடம்பெயர்ந்ததோ அவ்விடங்களில் எல்லாம் ஆதி மனிதர்கள் பனை விதைகளை தங்களுடன் எடுத்துச் சென்றனர் எனச் சொல்லப்படுகிறது. ஏனென்றால், பனை மரங்கள் மக்கள் வாழும் பகுதிகளின் அருகிலேயே பெரும்பாலும் இருக்கிறது. இது பெரும்பாலும் அடர் காடுகளில் காண இயலாததற்கு காரணமாக இது கூறப்படுகிறது.[10]
இது ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன. தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன.
கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன.[11] இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ளன. சேலம்,நாமக்கல்,சென்னை, செங்கற்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் அதிகமான அளவு நிறைந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளன.
பனையின் பயன்கள்
பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது.
விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக பேரளவு வேலை வாய்ப்பினைக்கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது. இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும்.
பனங்கருக்குப் பகுதி
பனையின் இன்னல்கள்
- பனங்கருக்கு
பனங்கருக்குகள், பனைமரமேறிகளுக்கு மிகுந்த ஊறு விளைவிப்பவையாகும். கூர்மையான அந்த முட்கள் போன்ற அமைவுகள், அவ்வேழை பனைமரமேறிகளுக்கு இன்னல் தருகிறது.
பனங்கை
விக்சனரியில் பனங்கை என்னும் சொல்லைப் பார்க்கவும்.
பனங்கை அல்லது பனை வரிச்சல் என்பது பனை மரத்தை நீளவாக்கில் அறுத்தால் வரும் நீளமான மரக்கட்டை ஆகும். இது கட்டிடக் கூரைகளில் பயன்படுத்தப்படுகிறது.
பனையேற்றம்
பனையேறுதல் என்பது பருவகாலத் தொழில். ஏப்ரல் முதல் ஆகத்து மாதம் வரை இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் ஆகத்து முதல் மார்ச்சு மாதம் வரை கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் பனையேற்றம் நிகழும். இது ஒரு பருவ காலத் தொழிலாக இருப்பதால் இம்மாவட்டங்களில் வேலை தேடி இடம்பெயருதல் பெருமளவு நிகழ்கிறது
பனையேற்றம் என்பது மரமேறுதல், பூ பக்குவம் அறிதல், சாறு சேகரித்தல் எனப் பல்வேறு திறன்களை உள்ளடக்கிய தொழில் ஆகும். மரமேற நெஞ்சப் பட்டை, இடை வார், தளை ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. இத்தொழில் புரியும்போது மரத்தின் சொரசொரப்பான பகுதியில் உடல் உராயும்பொழுது சிராய்ப்பு ஏற்பட்டு உடல் பொலிவிழக்கிறது. மரம் ஏறுதலின் இடரையும் துன்பத்தையும் களைய இயந்திரச் சாதனங்கள் எதுவுமில்லை. ஒரு மரம் சராசரி 36 முதல் 42 மீட்டர் வரை உயரமுடையது. எனவே ஒரு நாளைக்கு இரு முறை 30 முதல் 40 மரங்கள் ஏறுதல் என்பது பெரும் இடர் மிகுந்தது ஆகும். எனவே மிகுந்த அனுபவசாலிகளே பனைமரமேறுவர். தளைநாரைக் காலில் கட்டி பனைமரம் ஏறுவர்.
பனைமரமேறி
பனைத்தொழிலாளர் நிலை
80 விழுக்காட்டிற்கும் அதிகமான பனைத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ்தான் வாழ்கிறார்கள். ஒரு பனைத் தொழிலாளர் நாள்தோறும் 10 முதல் 15 மணி நேரம் வரை மேற்கொள்ளும் வேலைக்கு 15 ரூபாய்கள் வரை சம்பாதிக்கிறார். எனவே ஒரு பனைத் தொழிலாளரின் குடும்ப வருமானமானது அவர் எத்தனை பனை மரங்கள் ஏறுகிறார் என்பதனையும் அவர் குடும்பத்தில் எத்தனை உழைப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதனையும் பொருத்தே அமைகிறது. பெரும்பான்மையான பனைத் தொழிலாளர்களுக்கு சொந்த மரங்களில்லை. தமிழகத்தில் உள்ள பனையேறும் குடும்பங்களில் 67.85% குடும்பங்களுக்கு சொந்த மரங்கள் கிடையாது என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நிலக்கிழார்கள் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்கக் குறைந்த கூலிக்கு ஆள்களை நியமித்துக்கொள்கிறார்கள்.
பனஞ்சாறு உடலுக்கு நலம் தரும் நீரகம். இதில் கொழுப்பு, புரதம், கனிமங்கள், உயிர்சத்துகள், இரும்பு, எரியம், சுண்ணாம்பு, கரிநீரகி ஆகியன உள்ளன. இது சத்துள்ளது. எளிதில் செரிக்கக் கூடியது. இது எலும்புருக்கி நோயைக் குணப்படுத்தும் தன்மையுடையது என்றும் ஈரல் நோய்க்கு ஏற்ற மருந்தென்றும் கருதப்படுகிறது. 25% குறையாத பதனீர் நேரடியாகவே நுகரப்படுகிறது. மீதம் உள்ளவை வெல்லம் தயாரிக்கப் பயன்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்தின் பெரும்பகுதி உள்ளூரிலேயே விற்கப்படுகிறது. அவசரப் பணத்தேவை, சந்தைவிலையை அறியாமை, சந்தைக்குக் கொண்டு செல்ல நேரமின்மை ஆகியவற்றின் காரணமாக இடைத்தரகர்களின் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.
ஆப்பிரிக்கப் பனம்பழம்
பனைத்தொழில்
உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்தல், சந்தையிடல் ஆகியவற்றிலும் கூடச் சிக்கல்கள் உள்ளன. போதிய முதலீடின்மை, தொழிலாளர் எண்ணிக்கைக் குறைவு ஆகியன பெரும் சிக்கல்கள் எனக் கூறப்படுகின்றன. மிகக் குறைந்த வருமானத்தையே நல்கும்நிலையில் பனைத்தொழில் இருப்பதால் தொழிலாளர்களை பெருமளவில் ஈர்க்க முடியாமல் இத்தொழில் மெல்ல மெல்ல நலிந்து கொண்டிருக்கிறது.
எவ்வாறாயினும் பனைத்தொழில் பெருமளவு வேலைவாய்ப்பும்; உணவு மற்றும் உணவிலிப் பனைப் பொருள்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேவை இருத்தல் வெள்ளிடை மலை. பனங்கற்கண்டு போன்ற மதிப்புடை உணவுப் பொருள்களை உற்பத்தி செய்தல் மூலம் முன்னைய சிக்கல்களை வினைவலிமையோடு எதிர்கொள்ள முடியும் என்பதை மார்த்தாண்டத்திலுள்ள பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் கண்டது. பதநீரைக் கொண்டு வெல்லம் காய்ச்சுவதைக் காட்டிலும் பனங்கற்கண்டு தயாரித்தல் இலாபமுடையது என்று கண்டறியப்பட்டது. இவ்வுற்பத்தியால் பனைத்தொழிலாளர் வாழ்வும் தொழிற்றுறையின் வளர்ச்சியும் மேம்படுவது ஐயத்திற்கு இடமின்றி நிரூபனமானது. உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்யும் அலகுகளை தோற்றுவிக்கும் பணியில் கூட்டுறவுத்துறையும் தன்னார்வத் தொண்டகங்களும் தனியார்களும் ஈடுபட்டுள்ளனர். வடிவமைத்தல் பயிற்சி, உற்பத்திப் பொருள்களை பரவலாக்கல், சரியான முதலீடு, சந்தையிடல் வசதிகள் ஆகியன உணவிலிப் பொருள்களின் உற்பத்தியையும் சந்தையிடலையும் அதிகப்படுத்தியுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்களுக்கு பனைத் தொழில் கொண்டுள்ள வளவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு தந்து அவர்கள் வாழ்க்கையை சீர்படுத்துவதில் பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் முன்னோடியாகத் திகழ்கிறது.