பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் சீற்றத்திலிருந்து இலங்கை மீனவர்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, படகு ஒன்றை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் மீனவர்கள் கடல் சீற்றங்களில் இருந்து தங்களது பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட படகுகளை எதிர்காலத்தில் பெற முடியும். .
நார்வே அரசாங்கத்தின் நிதியுதவியில் செயற்படுத்தப்படுகின்ற இத் திட்டம், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) கடற்படைக் கட்டிடக் கலைஞரான திரு. டெரிக் மெனெஸ் என்பவரினால் இப் படகு மாதிரி உருவாக்கப்படவுள்ளது. “இக் காலகட்டத்தில், காலநிலை வேகமாக மாறி, புயல்களின் தீவிரம் அதிகரித்து வருவதால், இப் படகு வடிவமைப்பு மீனவர்களைப் பாதுகாப்பதோடு அவர்களை பாதுகாப்பாக கரையை அடையவும் உதவும்” என்று அவர் கூறினார்.
இப்படகானது, தற்போது காணப்படும் படகுகளின் பலவீனங்கள், மீன்பிடி முறைகள், பாதுகாப்பு மற்றும் காலநிலை சவால்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டது. அதன்படி இப்படகானது 20 அடி (6 மீ) மற்றும் 23 அடி (7 மீ) அளவுகளில் வர இருக்கின்றது. இப்படகின் உடலானது சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட, உற்பத்தித் தரம் மற்றும் பாதுகாப்புத் தரங்களைப் பின்பற்றி ஃபைபர் கிளாஸ் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் உடல் மிதக்கும் தன்மை அதிகமாக உள்ளதால் மூழ்குவது மிகவும் கடினமாக காணப்படுகின்றது. முன், பின் மற்றும் பக்கங்களில் சேர்க்கப்படும் பாலிஸ்டிரீன் தொகுதிகள் அலைகளால் ஏற்படும் பாதிப்பை குறைத்து படகை மிதக்க வைக்க உதவுகிறது. மற்றொரு பாதுகாப்பு சாதனமாக, வலைகளை இழுக்கும் போது நிலையான தன்மையை வழங்க படகில் அதிக அகலம் சேர்க்கப்படுகிறது. மோட்டார் பழுதடையும் அவசர சந்தர்ப்பங்களில் , படகின் முன்பகுதியில் காணப்படும் ஓட்டை மற்றும் அடித்தளம் மூலம் மீனவர்கள் கரைக்கு திரும்புவதற்கு சிறிய பாய்மரம் அமைக்கக் கூடிய வசதிகளும் காணப்படுகின்றது.
படகு பணியாளர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க வழிசெலுத்தல் விளக்கு, லைஃப் ஜாக்கெட்டுகள், ரிங்-போய்கள், பாதுகாப்பு கிராப் பேக், VHF ரேடியோ, GPS, ஃப்ளேயர்கள், பகலில் சமிக்ஞை செய்வதற்கான கண்ணாடி மற்றும் இரவில் அவ்வாறு செய்வதற்கான மீட்பு லேசர் சாதனம், ஒரு விசில், ஒரு திசைகாட்டி மற்றும் மருத்துவக் கருவி ஆகிய சிறந்த உபகரணங்களுடன் பொருத்தப்பட்டுள்ளதோடு இவை இரவில் மற்ற கப்பல்களுக்குத் தெரியும் வகையில் இருக்கும். பாதுகாப்பு கிராப் பேக் மிதக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு அதன் உள்ளடக்கங்களை உலர வைக்கவும் முடியும்.
இலங்கை மீனவர்கள் தங்கள் படகுகளை தினமும் கடற்கரையில் மேலும் கீழும் இழுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதால், கப்பலின் கீழ்ப் பகுதியின் மேலோட்டத்தைப் பாதுகாக்க துருப்பிடிக்காத உறை பொருத்தப்பட்டுள்ளது. இது மேலோட்டத்தை பழுதுபார்க்கும் கூடுதல் செலவுகளைத் தவிர்க்கிறது. கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட இப் படகின் விலை சராசரி சந்தை விலையை விட அதிகமாக காணப்பட்டாலும் , பாதுகாப்பு மற்றும் மென்மையான மேலோடு வடிவமைப்பு எரிபொருள் செயல்திறனை அதிகப்படுத்துவதோடு செலவுகளை முடிந்தவரை குறைவாக வைத்திருக்கிறது.