பல நூற்றாண்டுகளாக, இலங்கை மக்களின் கிராமப்புற சமூகங்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும், ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் உள்ளூர் பால் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமப்புற குடும்பங்களின் வருமான அளவை உயர்த்துவதற்கும் உணவுப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் பாற்பண்ணை கணிசமான பங்களிப்பைச் செய்தாலும், விரும்பிய தன்னிறைவு இதுவரை அடையப்படவில்லை
ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் (Hector Kobbekaduwa Agrarian Research and Training Institute) இலங்கையின் வறண்ட பகுதிகளில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பால் உற்பத்தியின் தொழில்நுட்ப திறனை பாதிக்கும் காரணிகள் குறித்து ஆராய்ச்சியினை மேற்கொண்டது. யாழ்ப்பாண மாவட்டத்தின் காலநிலை மற்றும் நிலப்பரப்பு பாற்பண்ணைக்கு ஏற்றதுடன் , மாவட்டம் முழுவதும் இப் பண்ணை பரவியுள்ளது . பாரம்பரியமாக, சிறிய அளவிலான பாற்பண்ணை இங்கு பரவலாக உள்ளதுடன் பல குடும்பங்கள் எருமைகள் மற்றும் மாடுகளை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து பால் உற்பத்தி முறைகளை ஊக்குவிக்கவும், இப்பகுதியில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளும் முயற்சித்து வருகின்றன. இந்த ஆய்வுக்கான தரவுகள் சாவகச்சேரி, கோப்பாய் மற்றும் உடுவில் ஆகிய யாழ்ப்பாணத்தின் முன்னணி பால் உற்பத்தி பகுதிகளில் சேகரிக்கப்பட்டது.
சாவகச்சேரி பிரதேசத்தில் எழுதுமட்டுவாள் , கொடிகாமம் ஆகிய கிராமங்களிலும், கோப்பாய் பிரதேசத்தில் கோப்பாய் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை உள்ளடக்கிய அச்சுவேலி கிராமத்திலும் ஆய்விற்கான தரவு சேகரிக்கப்பட்டது . மேலும், உடுவில் பகுதியில் உள்ள இணுவில் கிராமத்தில் இருந்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. முக்கியமாக இந்த பகுதிகளில் நடுத்தர மற்றும் சிறிய அளவிலான பாற்பண்ணைகள் உள்ளன. பல விவசாயிகள் அதிக வருமானம் பெறவும், தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் மேலும் சிலர் பரம்பரையான தொழிலாக ஈடுபட்டு வருகின்றனர். ஜேர்ஸி கலப்பு (Jersey cross) மற்றும் ஃப்ரீசியன் கலப்பு(Friesian cross) ஆகியவை இப்பகுதியில் பல விவசாயிகளால் பயன்படுத்தப்படும் முக்கிய கால்நடை இனங்களாகும் , மேலும் இந்த இனங்கள் உள்ளூர் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு நன்கு இசைவாக்கம் அடைந்தவை.
யாழ்ப்பாண மாவட்டத்தின் மாடுகளின் எண்ணிக்கை
ஆண்டு | உள்ளூர் | கலப்பு |
2018 | 48200 | 10220 |
2019 | 48380 | 8440 |
2020 | 47720 | 9140 |
2021 | 49450 | 9600 |
2022 | 46060 | 9260 |
2023 | 58540 | 10180 |
விவசாயிகள் தங்கள் பாற்பண்ணைகளை தங்கள் குடியிருப்புகளின் அருகே அமைத்துள்ளனர் மற்றும் கால்நடை வளர்ப்பிற்காக ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை ஒதுக்குகின்றனர். இதனால் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் மாடுகளை வளர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட முடிகின்றது. 38.6% பண்ணைகள் நடுத்தரமான தீவிரமுகாமைத்துவத்திலும்,37.3%தீவிரமுகாமைத்துவத்திலும்,24%பண்ணைகள்
மேலோட்ட்மான முகாமைத்துவத்திலும் பராமரிக்கப்படுகின்றன.
ஆராய்ச்சி அறிக்கைகளின்படி, மேலோட்டமான கால்நடை வளர்ப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் பின்வருமாறு கூறலாம், அடர் தீவனத்தின் குறைந்த விலை, குறைந்தபட்ச உழைப்பின் பயன்பாடு மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக் குணங்களைக் கொண்ட பல வகையான புற்களைக் கால்நடைகளுக்கு உணவளிப்பதன் மூலம் கட்டுப்பாடற்ற முறையில் கீழ் கால்நடைகளை மேய்ச்சலுக்கு உட்படுத்தும் விவசாயிகள் அதிக லாபத்தைப் பெறுகின்றனர் . ஆனால் மேலோட்டமான முறையானது இலாபகரமானது என்றாலும், பல்வேறு குறைபாடுகளும் உள்ளன. 2012ல் விவசாய நிலங்கள் வன நிலம் என உரிமை கோரப்பட்டதால் மேய்ச்சல் நிலங்கள் குறைந்துள்ளதாகவும், நிலப்பற்றாக்குறை நிலவுவதாகவும், பெரும்பாலான விவசாயிகள் புகார் தெரிவித்தனர். எனவே நிலப்பற்றாக்குறை காரணமாக, மேலோட்டமான முகாமைத்துவத்தை மேற்கொள்ளுவவதில் சிக்கல்கள் உள்ளன.
இலங்கையில் தற்போதுள்ள சட்டங்களின் காரணமாக, சாலையோர விலங்குகள் மற்றும் பொது இடங்களில் மேய்ச்சல், நோய்கள் பரவுவதற்கான சாத்தியம் போன்றவை இங்கு மற்ற குறைபாடுகளாகும். தீவிர முறையில், சிறிய அளவிலான இடத்தில் உயர்தர பால் உற்பத்தியை அடைய முடியும். ஆனால் இது ஒரு விலையுயர்ந்த முறை. இந்த முறையில் வளர்க்கப்படும் கால்நடைகளிடையே நோய்கள் விரைவாகப் பரவும். அரை தீவிர முறையில், கால்நடைகளை பகலில் எவ்வித தடையுமின்றி சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விடப்படுகிறது, அதனால் விலங்குகள் மத்தியில் நல்ல ஆரோக்கியத்தை பேண முடியும். மேலும், தீவிர முறையுடன் ஒப்பிடும்போது குறைந்த செலவில் அதிக பால் உற்பத்தியைப் பெற முடியும் . ஆனால் கால்நடைகளுக்கு உணவளிப்பதற்கும், மேற்பார்வையிடுவதற்கும், நிர்வகிப்பதற்கும் அதிக உழைப்பு தேவைப்படுகிறது.
இப்பகுதி விவசாயிகள் ஆடு வளர்ப்பை விட மாடு வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கால்நடை வளர்ப்பில் அதிக லாபம் கிடைப்பதே இதற்குக் காரணம். பல்வேறு அரசாங்க திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் , சந்தை தேவை மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் போன்ற காரணிகளைப் பொறுத்து யாழ்ப்பாணத்தில் மாடுகளின் எண்ணிக்கை மற்றும் பால் உற்பத்தியின் அளவு மாறுபடும்.
தீபாவளி, பொங்கல், நவராத்திரி போன்ற பண்டிகை காலங்களில் இப்பகுதியில் பால் தேவை அதிகமாக இருக்கும். ஒரு பசுவின் தினசரி சராசரி பால் உற்பத்தி 3.14 லிட்டர் ஆகும். இப்பகுதிகளின் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பாலை யாழ்கோ, மில்கோ, கார்கில்ஸ், நெஸ்லே, கூட்டுறவு மையங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர். ஒரு லிட்டர் பால் ரூ. 170 முதல் ரூ. 200 வரை விலையிடப்படுகிறது. சில விவசாயிகள் நெய் மற்றும் வெண்ணெய் போன்ற பெறுமதி சேர் பாற்பொருட்களையும் உற்பத்தி செய்கின்றனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் பரம்பல் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை | ||
மாடுகள் 10 இல் குறைவானவை | மாடுகள் 10 – 50 இடைப்பட்டவை | மாடுகள் 50 இல் அதிகமானவை |
9351 | 368 | 31 |
யாழ்ப்பாண மாவட்டத்தில் பால் சேகரிப்பு மையங்கள் மற்றும் பெறுமதி சேர் உற்பத்தி மையங்கள்
ஆண்டு | 2018 | 2019 | 2020 | 2021 | 2022 | 2023 |
பால் சேகரிப்பு மையங்களின் எண்ணிக்கை | 77 | 86 | 79 | 78 | 81 | 87 |
பெறுமதி சேர் உற்பத்தி மையங்கள் | 7 | 6 | 7 | 9 | 10 | 14 |
சாவகச்சேரி, உடுவில் மற்றும் கோப்பாய் கால்நடை மருத்துவ அலுவலகங்கள் மற்றும் குண்டசாலை கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை விவசாயிகளுக்கு விவசாய விரிவாக்க சேவைகளை வழங்குகின்றன. இந்தச் சேவைகள் மாட்டுக் கொட்டகை முகாமைத்துவம் , நோய் முகாமைத்துவம் , இனப்பெருக்கம், மேய்ச்சல் முகாமைத்துவம் மற்றும் ஒருங்கிணைந்த விவசாய முறைகள் உள்ளிட்ட பல்வேறு வகைகளை உள்ளடக்கியது. கார்கில்ஸ், J.I.C.A. (ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்) மற்றும் மில்கோ மற்றும் MOD திட்டம் போன்ற தனியார் நிறுவனங்கள் சந்தை உதவி, கடன் திட்டங்கள், அடர் தீவன உற்பத்தி சம்மந்தப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு சேவைகளை வழங்குகின்றன.
பெரும்பாலான விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு பிரதானமாக வைக்கோல், சூப்பர் நேப்பியர் (Super Napier), CO3, சுகர் க்ராஸ் (Sugar grass) மற்றும் உள்ளூர் களைகளான வட்டுபாலு, ஹுலந்தலா, கரல்ஹபா, பெத்திடோரா, குருநாகல் டெய்சி உள்ளிட்ட வகைகளை தீனியங்களாக வழங்குகின்றனர். சூப்பர் நேப்பியர் புல்லை பல விவசாயிகள் தங்கள் மாடுகளின் உணவாக பயன்படுத்த விரும்புகின்றனர். அவர்கள் தங்கள் வயல்களில் வைக்கோலைப் பெறுகிறார்கள் அல்லது மற்ற விவசாயிகளிடமிருந்து வாங்குகிறார்கள். மேற்கூறிய தீவனங்களுக்கு மேலதிகமாக, சந்தையில் ப்றீமா , மகாவெளி போன்ற அடர் தீவனங்களும், தேங்காய்ப்பூ, எள்ளு புண்ணாக்கு, அரிசிப் புண்ணாக்கு, பருப்புப் புண்ணாக்கு, உளுந்து உமி, நிலக்கடலை உமி, பனை ஓலைகள், சோளம், கனியுப்புகள் (கால்சியம்), விற்றமின்கள் போன்ற அடர் தீவனங்களும் ஊட்டச்சத்துக்கு துணையாக வழங்கப்படுகின்றன.
விலங்குகளின் ஆரோக்கியத்தையும் உற்பத்தித்திறனையும் திறம்பட பராமரிக்க ஆண்டின் வறட்சியான காலங்களில் சைலேஜ் மற்றும் வைக்கோல் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. ஆய்வு அறிக்கைகளின்படி, அதிக சைலேஜைப் (silage) பயன்படுத்துவதன் மூலம் பால் உற்பத்தியில் 27% அதிகரிப்பு காணப்படுகிறது. எனவே, யாழ்.மாவட்டத்தில் உள்ள பாற்பண்ணையாளர்களுக்கு சைலேஜ் (silage) உற்பத்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம்.
கால்நடைகளுக்கு நீர் கொடுக்கும் போது, சிறு விவசாயிகள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். ஏனெனில் கால்நடைகள் சுற்றித் திரியும் மேய்ச்சல் பகுதிகள் அவற்றின் வாழ்விடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளன.
இனப்பெருக்க முறைகளைப் பொறுத்தவரை, ஆய்வுப் பகுதியில் இயற்கை முறையிலான இனப்பெருக்கம் பொதுவானது, ஆனால் சில பகுதிகளில் பெரிய அளவிலான மற்றும் சிறிய அளவிலான விவசாயிகள் செயற்கை கருவூட்டலை (AI – செயற்கை கருவூட்டல்) தேர்வு செய்கிறார்கள், ஏனெனில் இது உயர்தர கால்நடைகளுடன் கலப்பு இனப்பெருக்கத்தை அனுமதிக்கும் ஒரு வசதியான அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. இந்த செயற்கை கருவூட்டல் முறையின் விலை பொதுவாக ரூ. 800 முதல் 1000 வரை. இருப்பினும், செயற்கை கருவூட்டல் பற்றிய அறிவு விவசாயிகளிடம் குறைவாக இருப்பதனாலும் செயற்கை கருவூட்டலுக்கான வசதிகள் குறைவாக உள்ளதினாலும் செயற்கை கருவூட்டல் சில நேரங்களில் குறைந்த வெற்றி விகிதங்களைக் காட்டுகிறது.
வடக்கு பிராந்தியத்தில் வாழும் 67% பாற்பண்ணையாளர்கள் செயற்கை கருவூட்டல் முறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் பல விவசாயிகள் இது வெற்றி பெறும் சதவீதம் குறித்து புகார் கூறுகின்றனர். செயற்கை கருவூட்டலின் வெற்றியை பாதிக்கும் முக்கிய காரணிகள் பசுவின் கருவூட்டும் தன்மையை கண்டறியும் சரியான வெப்பத்தைக் கண்டறிந்து சரியான நேரத்தில் செயற்கை கருவூட்டல் செய்வது. பெரும்பாலான பாற்பண்ணையாளர்களுக்கு இது பற்றிய அறிவு மிகக் குறைவு. மேலும், செயற்கை கருவூட்டல் குறித்து போதிய அறிவு இருப்பவர்களை சரியான நேரத்தில் அழைத்து வரமுடியாமை ஆகியவை செயற்கை கருவூட்டலின் வெற்றியை குறையச் செய்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக, செயற்கை கருவூட்டல் தொழிநுட்பம் குறித்த விரிவான அறிவை விவசாயிகளுக்கு வழங்குவது விரும்பத்தக்கது.
சில விவசாயிகள் மாட்டு கொட்டகை அமைப்பதற்காக பிரதேச செயலகத்திலோ அல்லது கால்நடை வைத்திய அலுவலகத்திலோ நிதியுதவியினைப் பெற்றுள்ளனர்.. ஆனால், அரச நிறுவனங்களிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கப்பெறாமையால், சொந்த நிதியைப் பயன்படுத்தி இந்த மாட்டு கொட்டகை அமைத்த விவசாயிகளும் உள்ளனர்.இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு பொருத்தமான கொட்டகை அமைக்கும் போது, போதுமான இடம், சீமெந்து தரைகள், கழிவுநீர் அகற்றும் அமைப்பு மற்றும் சரியான காற்றோட்டம் ஆகியவற்றை உறுதி செய்தல் உள்ளிட்ட சில முக்கிய காரணிகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள சில விவசாயிகள் தங்கள் மாட்டு தொழுவங்களில் மணலைப் பயன்படுத்த விரும்புகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள கால்நடைகள் கடந்த ஆண்டில் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன, அவற்றில் சில , கால்நடை உண்ணி காய்ச்சல், பால் காய்ச்சல் அல்லது ஹைபோகால்சீமியா (hypocalcaemia), தோல் கட்டி நோய், பெரியம்மை, கருப்பு கால் மற்றும் புருசெல்லோசிஸ் (brucellosis) ஆகியவையாகும்.
உலர் வலயத்தில் நிலவும் காலநிலை அனைத்து இன கால்நடைகளுக்கும் ஏற்றதாக இல்லை. யாழ் மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க இது பெரும் தடையாக உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை, சத்தான பச்சை புல் இல்லாமை, அதிக வெப்பநிலை போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள். இதற்கு தீர்வாக, பல்வேறு ஆராய்ச்சி குழுக்கள் நடத்திய ஆராய்ச்சியின் பலனாக, வறண்ட பகுதிக்கு ஏற்ற கால்நடை இனமான சுனந்தினி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, யாழ்.மாவட்டத்தில் பால் உற்பத்திக்கான மற்றுமொரு முக்கிய பிரச்சினை விவசாயிகளின் பொருளாதாரச் சிரமங்களும், பாற்பண்ணையை அதிகரிக்க அரசாங்கம் வழங்கும் கடன் வசதிகள் பற்றிய அறிவின்மையும் ஆகும்.
உலர் வலயத்தில் பாற்பண்ணையை பாதிக்கும் முக்கிய சவால்கள்
- பால் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட பால் பொருட்களுக்கான குளிர்சாதனப் பெட்டி வசதிகள் குறைவு
- பெறுமதி சேர் பொருட்கள் அதிக சந்தை விலையில் காணப்படுகிறது பற்றிய அறிவு இல்லாமை
- பாற் பண்ணையை மேம்படுத்தவும் பராமரிக்கவும் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பற்றாக்குறை.
- கால்நடைத் தீவனத்தின் விலை உயர்வால் உற்பத்திச் செலவு அதிகரிப்பு.
- பால் மற்றும் கால்நடை தீவனம் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் இல்லாமை.
- வார இறுதி நாட்களில் விவசாயிகளின் பால் விற்பனைக்கு சந்தை வசதிகள் இல்லாமை
- யாழ்ப்பாண மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பொதுவான வாய்ப்புகள் பின்வருமாறு.
- பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களான எருமைப்பால், தயிர், ஐஸ்கிரீம் போன்றவற்றுக்கு சந்தையில் அதிக தேவை உள்ளது.
- நெஸ்லே போன்ற தனியார் நிறுவனங்களால் மந்தைகளை வழங்குதல், பாலை பாதுகாப்பதற்கான வசதிகள் , பாலின் தரத்தை அளவிடுவதற்கு தேவையான வசதிகள் , பால் கொண்டு செல்வதற்கான வசதிகள் போன்றவை இதில் முக்கியமானவை.
யாழ்.மாவட்டத்தில் பால் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அது இன்னும் உரிய நிலையை அடையவில்லை. யாழ் மாவட்டத்தில் ஒரு கால்நடைக்கு ஒரு நாளைக்கு சராசரியாக பசுவின் பால் உற்பத்தியில் (லிட்டர்) விவசாயிகளின் அனுபவம், கால்நடைகள் ஒரு நாளைக்கு நீர் அருந்தும் தடவைகள், அடர் தீவனம் வழங்கப்படும் தடவைகள், ஒரு நாளைக்கு அளிக்கப்படும் அடர் தீவனத்தின் அளவு (கிலோ), ஒரு நாளைக்கு அளிக்கப்படும் கனியுப்புகளின் அளவு, கால்நடைகளுக்கான முகாமைத்துவங்களின் வகைகள் போன்ற காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.
வடமாகாணத்தில் பாற்பண்ணைக்கு புதியதொரு அம்சமாக , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் முல்லைப் பாற் பண்ணையும் இணைந்து வில்வம் பழ யோகட் பானத்தினை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும், முல்லை பாற்பண்ணையானது பாஸ்ரரைஸ்ட் செய்யப்பட்ட பால், எருமை பால், தயிர், நெய் மற்றும் பாலாடை சீஸ் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகின்றனர். இவர்களது உற்பத்திப் பொருட்களுக்கு யாழ்ப்பாணப் பகுதியில் அதிக தேவை உள்ளது.
யாழ்ப்பாணத்தில் பாற்பண்ணைக்கு ஆதரவாக 2016 ஆம் ஆண்டு உரும்பிராயில் நெஸ்லே பால் குளிரூட்டும் நிலையம் நிறுவப்பட்டது. தற்போது யாழ் மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெஸ்லே நிறுவனத்துடன் இணைந்து தரம் மற்றும் சுகாதார பாதுகாப்புடன் புதிய பாலை உற்பத்தி செய்து வருகின்றனர். புதிய பால் உற்பத்திக்கு பாற்பண்ணையாளர்களுக்கு தேவையான பெரும்பாலான சேவைகள் இந் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது
விவசாயிகளின் அனுபவம் மற்றும் முகாமைத்துவ அமைப்புகளை விட மற்ற அனைத்து காரணிகளும் கால்நடைகளுக்கு உணவளிக்கும் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை. எனவே, தீவனத்தின் தரம் மற்றும் பால் உற்பத்தியில் அதன் தாக்கம் பற்றிய தகவல்களை விவசாயிகளிடையே துல்லியமாக பரப்புவது அவசியம்.
ஆய்வு அறிக்கைகளின்படி, வடக்கு பிரதேசத்தில் பெரும்பாலான பெண்கள் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை. அவர்களின் பலர் வேலையில்லாத நிலையில் பாதிக்கப்பட்டு ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இதேவேளை, 30 வருட இன யுத்தம் முடிவடைந்ததையடுத்து, விதவைகள் பாற்பண்ணை மீளுருவாக்கம் திட்டத்தில் இணைந்து, பாற்பண்ணையில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்தை வலுப்படுத்திக் கொண்டுள்ளனர். தற்போது வடக்கில் வேலையின்றி தவிக்கும் பெண்களுக்கு பாற்பண்ணை பற்றிய அறிவை காலத்துக்கு ஏற்றவாறு வழங்கி அவர்களை அத்துறைக்கு வழிநடத்துகின்றது என்பதையே இது காட்டுகிறது.