- மொனராகலை மாவட்டத்தில் அதிக காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் பிரதேச செயலகப் பிரிவில் குளங்களைப் புனரமைக்க 25 மில்லியன் ரூபா.
- உடவலவ, மொனராகலை, அம்பாறை மற்றும் மகாவலி “சீ ” வலயங்கள் ஒன்றிணைக்கப்பட்டு உலர் வலயத்தின் பாரிய விவசாய வலயமாக அபிவிருத்தி செய்யப்படும்- ஜனாதிபதி.
- “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்ட மக்களுக்காக 41,960 காணி உறுதிப் பத்திரங்கள்
முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் ‘உறுமய’ வேலைத் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் அதிகளவு உறுதிகளை வழங்கும் பிரதேச செயலகத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கு 25 மில்லியன் ரூபா வழங்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்த இரண்டு வேலைத்திட்டங்களினாலும் இந்நாட்டின் விவசாயிகள் வெற்றி பெறுவார்கள் எனத் தெரிவித்த ஜனாதிபதி, விவசாயிகளை முன்னேற்றுவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கிக்கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் ‘உறுமய’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மொனராகலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் தகுதியான 41,960 பயனாளிகளில், அடையாள ரீதியில் 600 பேருக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (30) முற்பகல் வெல்லவாயவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்தும் இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, கண்டி இராச்சியத்திற்கு அரிசி வழங்கிய வெல்லஸ்ஸ 1818 ஆம் ஆண்டு போரின் பின்னர் அழிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
பின்னர், பல்வேறு அரசாங்கங்களின் கீழ் இந்த மாகாணம் அபிவிருத்தி செய்யப்பட்ட போதிலும் மக்களுக்கு காணி உரிமை கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டுக்கு அரிசி வழங்கிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அந்தப் பொறுப்பை நிறைவேற்றக் கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
மேலும், உடவலவ, மொனராகலை, அம்பாறை மற்றும் மகாவலி சி வலயத்தை ஒன்றிணைத்து உலர் வலயத்தில் பாரிய விவசாய வலயமாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மொனராகலை மாவட்ட மக்களுக்கு உறுமய காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, பின்னர் மக்கள் மத்தியில் சென்று அவர்களின் தகவல்களை கேட்டறிந்து சுமூகமான உரையாடலில் ஈடுபட்டார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,
‘’கண்டி இராச்சியத்திற்கு தேவையான அரிசி இந்த வெல்லஸ்ஸ பிரதேசத்தில் இருந்தே வழங்கப்பட்டது. ஆனால் 1818 போருக்குப் பிறகு வெல்லஸ்ஸ முற்றாக அழிக்கப்பட்டது.
இங்கு வாழ்ந்த மக்கள் வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். அதன் பின்னர் இந்த மொனராகலை மாவட்டம் 1960 இல் உருவாகியது. 1977 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் நான் இப்பகுதிக்கு வரும் போது இந்த மாகாணம் மிகவும் பின்தங்கிய மாகாணமாக இருந்தது.
1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் மொனராகலை மாவட்டத்தின் அபிவிருத்தி வெவ்வேறு அரசாங்கங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. வெளி மாகாணங்களில் இருந்து வந்தவர்கள் இங்கு குடியேறினர். வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
இதனால், இப்பகுதி நகரமயமாக்கப்பட்டது. இப்பிரதேச மக்களின் முயற்சியினால் மொனராகலை விவசாய பிரதேசமாக அபிவிருத்தியடைந்தது.
இது உங்கள் முன்னோர்களின் வியர்வையால் கட்டியெழுப்பப்பட்ட பிரதேசமாகும். ஆனால் இந்தப் பகுதி மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி உரிமை இருக்கவில்லை. மொனராகலை மாவட்ட விவசாயிகள் இந்த நாட்டிற்காக ஆற்றிவரும் சேவைக்கு உரிய கவனம் செலுத்தப்படவில்லை. ஆனால் மொனராகலை விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த உறுமய காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். அது தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
மொனராகலை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு முழு உரிமையுள்ள காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இந்த காணி உரிமைகளை மக்களுக்கு வழங்க வேண்டாம் என்று சிலர் கூறினர். சிலர் நீதிமன்றத்துக்கும் சென்றனர்.
ஆனால் அவற்றுக்கு முகங்கொடுத்தே இன்று மக்களுக்கு காணி உரிமையை வழங்கியுள்ளோம்.
இந்தக் காணி உரிமையைப் பெற்றுகொள்வது மாத்திரம் போதாது. அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும். இந்தப் பகுதிகளில் விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கி நாம் விரைவாகச் செல்ல வேண்டும். அதற்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும். துறைமுகம் மற்றும் விமான நிலையம் இரண்டும் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன.
எனவே, உடவலவ, மொனராகலை, அம்பாறை மற்றும் மகாவலி சி வலஙத்தை உலர் பிரதேசத்தில் பாரிய விவசாய வலயமாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கின்றோம். விவசாயிகளுக்கு காணி உரிமை வழங்கப்படுவது மாத்திரமின்றி, அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான பிரவேசம், இந்த உறுமய வேலைத்திட்டம் மூலம் முன்னெடுக்கப்படுகிறது.
எதிர்வரும் 30, 40 வருடங்களில் உலகிற்குத் தேவையான உணவு கிடைப்பது பாரிய பிரச்சினையாக இருக்கும். அந்த உணவை வழங்க நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்கு இந்த மாகாணங்களில் முழுமையான விவசாய முறை உருவாக்கப்பட வேண்டும்.
மேலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பாரிய முதலீட்டு வலயங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அதேபோன்று, சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி காலி தொடக்கம் அம்பாறை வரையில் பாரிய செயற்படுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. அந்த நடவடிக்கைகள் அடுத்த 20-30 ஆண்டுகளில் செய்யப்பட வேண்டும்.
அந்த நேரத்தில் நாம் இல்லாவிட்டாலும், நமது வருங்கால சந்ததியினருக்காக அந்த விடயங்களைச் செயற்படுத்த வேண்டும். இந்த வேலைத் திட்டத்தின் மூலம் வெல்லவாய பாரிய அபிவிருத்திகளைப் பெறும். வெல்லாவையில் இருந்துதான் மலையகத்திற்கான பிரவேசப் பாதை உள்ளது. எல்ல மற்றும் பிபில ஊடாக பஸ்ஸறை வரை இந்த அபிவிருத்தி நகர்கிறது.
உறுமய காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் தேவையான பணியாளர்களை நியமிக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்தத் திட்டத்தை நாம் துரிதப்படுத்த வேண்டும். இந்த காணி உறுதிப்பத்திரங்களைப் பெறுவதற்குத் தகுதியானவர்களின் பட்டியல் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் உள்ளது. அவர்களை அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு வரவழைத்து பிரச்சினைகள் இருப்பின் அவற்றைத் தீர்த்து இந்த உறுதிப்பத்திரங்கள் வழங்குவதை விரைவில் நிறைவு செய்யுமாறு அனைத்துப் பிரதேச செயலகங்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த நடவடிக்கைகளுக்கு பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பிரதேச செயலாளருடன் இணைந்து கொள்ள முடியும். இந்த நடவடிக்கைகள் இம்மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். அதிகளவான உறுமய காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள குளங்களைப் புனரமைப்பதற்காக 25 மில்லியன் ரூபாவை வழங்குவேன் என்பதை உறுதியாக கூறுகிறேன். இந்த இரண்டு திட்டங்களிலும் இந்த நாட்டில் முழு உரிமையுள்ள காணி உறுதிகளைப் பெற்றுக் கொள்ளும் மக்களே வெற்றி பெறுகிறார்கள் என்பதைக் கூற வேண்டும். இந்தக் காணி உரிமையுடன் புது வாழ்க்கையை ஆரம்பிக்க உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.