தனது 30 வருடங்களில், இல்லேபெரும ஆராச்சிலகே ரத்நாயக்க அல்லது அவர் கிராமத்தில் ரத்நாயக்க என்று அறியப்படும் ஒரு விவசாயி, தனது வெங்காய விதைப் பயிர்ச்செய்கையின் முழுப் பயனையும் பெறுவதற்காக போராடினார். அவர் 22 வயது இளைஞராக எந்த பயிற்சியும் இல்லாமல் அவரது பகுதியில் உள்ள மற்ற விவசாயிகளின் படிப்பினைகள் மற்றும் குறிப்புகளை நம்பி இப்பயிரை பயிரிடத் தொடங்கினார்.
தனது பயிர்களைப் பாதுகாப்பதற்கான வளங்களும் சரியான உபகரணங்களும் இல்லாததால், ரத்நாயக்க மூங்கில் மரங்களையும் பொலித்தீன் தாள்களையும் தற்காலிக கூடாரங்களாகப் பயன்படுத்தினார். ஆனால் இக் கட்டமைப்புகள் பலத்த மழை மற்றும் காற்றை தாங்க முடியாததனால் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக, இலங்கையின் வடக்கே அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள களுகல கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு இந்த எதிர்பாராத வானிலை மற்றும் அதிக மழை தொடர்ச்சியான சவால்களாக மாறின.
“நான் பல வருடங்களாக வெங்காயத்தை பயிரிட்டிருந்தாலும், பல்வேறு சவால்கள் காரணமாக குறிப்பாக சரியான மழைக் கூடாரங்கள் இல்லாததால், நான் விரும்பிய அறுவடையை அடைய முடியவில்லை,” என்று ரத்நாயக்க விவரிக்கிறார்.
அவரது குடும்பத்தின் ஒரே ஆதாரமாக, ரத்நாயக்கவின் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமே காணப்படுவதால் குடும்பத்தை பராமரிப்பது மட்டுமன்றி குழந்தைகளின் கல்வி நடவடிக்கையும் இதன் மூலமே எடுத்துச் செல்லப் படுகின்றது. அவரது உறுதிப்பாடு இருந்தபோதிலும், குறைந்த விளைச்சல் மற்றும் நிதி நெருக்கடிகள் அவரை வெங்காய சாகுபடியை முற்றிலுமாக கைவிடுவதை அடிக்கடி சிந்திக்க வைத்தது.
கனடா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) ஒரு புதுமையான திட்டம், , ரத்நாயக்கவின் விவசாய முயற்சிகளில் நம்பிக்கையை மீண்டும் தூண்டியது.
ரத்நாயக்க மற்றும் 91 சிறு விவசாயிகளுக்கு FAO உயர்தர விதைகளை உற்பத்தி செய்து வெங்காயம் மற்றும் மிளகாய் உற்பத்தியை மேம்படுத்தி, தேவையான பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கியது. சொந்தமாக உற்பத்தி செய்யும் விதைகள் விளைச்சலில் வித்தியாசத்தை ஏற்படுத்தும். உயர்தர விதைகளுடன் தொடங்குவது விவசாயிகளை வெற்றிக்கு அழைத்துச் செல்கிறது.
பாரம்பரிய விதை உற்பத்தி முறைகளில் ஈடுபட்டுள்ள வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள விவசாயிகள், பாதுகாக்கப்பட்ட வீடுகள், பச்சை இல்லங்கள், மழை காப்பகங்கள் மற்றும் நுண்ணீர் பாசன முறைகள் போன்ற புதுமையான தொழில்நுட்பங்களை கையாள்வது என்பது தொடர்பான விரிவான பயிற்சிகள் பெற தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த முன்னேற்றங்கள் அவர்களின் பயிர் மேலாண்மை நடைமுறைகளை வலுப்படுத்தியதோடு, நீர் மற்றும் உரத்தின் செயல்திறனை அதிகரித்து இரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் தேவையை குறைத்து பூச்சிகள் மற்றும் மழையினால் ஏற்படும் சேதங்களுக்கு எதிராக ஒரு கவசத்தை வழங்குகிறது. இதனால், பயிர்ச்செய்கை செழித்து, விளைச்சல் உயர்ந்தது.
“கடந்த காலங்களில், நாங்கள் தற்காலிக மழை காப்பகங்களைப் பயன்படுத்தினோம். கனமழையின் போது அவை பெரும்பாலும் தோல்வியடைந்து வெங்காய விதைகள் கெட்டுப்போனதால் இழப்பு ஏற்பட்டது. நான் சுமார் 2-3 கிலோகிராம் வெங்காய விதைகளை அறுவடை செய்தேன். ஆனால் புதிய திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட உயர்தர மழை காப்பகங்கள் மூலம், ஒரு பருவத்திற்கு 12-15 கிலோகிராம் விதைகளை அறுவடை செய்ய எதிர்பார்க்கிறோம்” என ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இப்போது பயிர்ச்செய்கையில் சிறந்த பலன்கள் கிடைத்து வருவதால், ரத்நாயக்கவால் சேமித்து எதிர்காலத்தை திட்டமிட முடிகிறது. “அதிகரித்த லாபத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று நானும் என் மனைவியும் கலந்தாலோசித்து, அந்த லாபத்தை எங்கள் பண்ணையில் முதலீடு செய்து, அடுத்த பருவத்தில் பயிரிடும் வெங்காயத்தின் அளவை விரிவாக்க வேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொண்டோம். இவ்வழியில் பண்ணையை வளர்ப்பதன் மூலம் இரண்டாவது மழைக் காப்பகத்தை நாமே வாங்குவதற்கு போதுமான அளவு சேமிக்கவும் முடியும்”.
இத்திட்டத்தில் பங்குகொண்ட களுகல கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய மாலனி செனஹெலதா எனும் விவசாயி கருத்து தெரிவிக்கையில், “நான் பயிற்சியில் கலந்துகொண்டபோது, பெரிய வெங்காயத்தை விதைப்பதில் சரியான முறையை நான் பின்பற்றவில்லை என்பதை உணர்ந்தேன். இவ்வுற்பத்தி பயிற்சிக்கு எனது நன்றிகள். இந்த வெங்காய உற்பத்தியை இலாபகரமாக மாற்றுவதில் எனக்கு நம்பிக்கை உள்ளது” என கூறினார்.
இத்திட்டம் 92 பெண்கள் மற்றும் ஆண் விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றியதுடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய நான்கு மாவட்டங்களில் பதினேழு மழை காப்பகங்களையும் பச்சை இல்லங்களையும் நிறுவியது. இலங்கையின் விவசாயத் திணைக்களம், FAO அறிமுகப்படுத்திய அறிவு மற்றும் புதுமையான முறைகள் தொடர்வதை உறுதிசெய்வதற்காக திட்டத்தால் உருவாக்கப்பட்ட பண்ணைகளை விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கு பயன்படுத்துகிறது.
FAO இலங்கையின் மரக்கறி பயிர் உற்பத்தித்திறனை விவசாயிகளுக்கு அறிவாற்றல் மற்றும் தேவையான கருவிகளை வழங்குவதன் மூலம், மேம்படுத்துகிறத. அதே நேரத்தில் நிலையான விவசாய முறைகளை ஊக்குவித்து உள்ளீடுகளின் அதிக செயல்திறன் மற்றும் குறைந்த செயல்பாட்டு செலவுகள் மூலம் அதிகரித்த விளைச்சலை உறுதி செய்கிறது.