சேலம்: நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க 70 சதவீத இளைஞர்கள் விவசாய தொழிலுக்கு வர வேண்டும் என, விஞ்ஞானி டாக்டர் பரசுராமன் கூறியுள்ளார்.
சேலத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதில் உள்ள சவால்கள் குறித்து விவாதிக்க மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானியான பரசுராமன் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.
பின்னர் பேசிய அவர் வேளாண் பொருட்கள் உற்பத்தியை பெருக்க, விஞ்ஞானத்துறையின் மூலம் பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு சேலம் சோனா கல்வி குழுமத்தடன் இணைந்து, விவசாய தொழிலில் பெண்களின் பங்களிப்பை ஏற்படுத்த தொழில்நுட்ப ஆராய்ச்சி மேற்கொள்கிறது.
வருங்காலத்தில் விவசாய தொழிலில் கிடைக்கும் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். தற்போது நாடு முழுவதும் வாழும் மக்களில், 35 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை அதிக அளவு உள்ளது. அவர்களில் 70 சதவீத இளைஞர்களை வேளாண் தொழிலுக்கு கொண்டு வர வேண்டும்.
அப்போது தான் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படாது. இளைஞர்களை விவசாய தொழிலில் ஈடுபட வைக்க வேண்டுமெனில், விவசாய விளைபொருட்களின் விளைச்சலை லாபகரமாக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும்.
ஆண்களை போல பெண்களையும் காய்கறி உள்ளிட்ட உணவுபொருட்கள் உற்பத்தி துறையில் ஈடுபடுத்த வேண்டும். செல்போன் மூலம் விவசாயத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டும். இப்படி செய்யும்பட்சத்தில் விவசாய துறையில் பெண்கள் அதிகளவில் ஈடுபட முன்வருவார்கள் என குறிப்பிட்டார்.
இந்த கருத்தரங்கில் மழைப்பொழிவு பற்றாக்குறை, நிலத்தடி நீர்மட்டம் குறைவு, விவசாயத்தில் பயிர் விளைச்சலை பெருக்குதல், காய்கறி மற்றும் தானியங்கள் உற்பத்தி போன்றவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.