புதுச்சேரியில் வயல்களுக்கு அதிநவீன ட்ரோன் கருவி மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரத்திற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் பாகூர் பகுதி நெற்களஞ்சியமாக திகழ்ந்து வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் நாளுக்குநாள் விவசாயம் குறைந்து வருகிறது. மேலும் விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் பல்வேறு விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலத்தை மனை பிரிவுகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயம் அழிந்து விடக்கூடாது என்று விவசாயத்திற்கு என்னென்ன கருவிகள் தேவைப்படும் என்பதை கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது உருவாக்கி வருகின்றனர்.
மேலும் விவசாயத்தை சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்றால், விவசாய கருவிகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நடவு இயந்திரம், அருவடை இயந்திரம் போன்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும், பல வேலைக்கு குறிப்பாக மருந்துகள் தெளிக்க ஆட்கள் தேவை என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், அரங்கனுாரை சேர்ந்த திருஞானமூர்த்தி என்பவரின் நெல் வயலில், பொறியியல் மாணவர்கள் உருவாக்கிய (டிரோன்) எனப்படும் சிறிய ரக வானூர்தி மூலமாக மருந்து தெளிக்கும் செயல் விளக்க நிகழ்ச்சி விவசாய நிலத்தில் நடைபெற்றது.
ஜி.பி.எஸ். கருவி மூலமாக விவசாய நிலங்களின் எல்லைகள் அளந்து, அதற்குட்பட்ட பகுதியில் உள்ள நெற்பயிர்களின் மீது அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற மருந்துகள் சிறிய பறக்கும் விமானம் மூலமாக தெளிக்கப்படுகிறது.
இதனை அரங்கனுார், சேலியமேடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். பல்வேறு மாநிலங்களில் ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், புதுச்சேரி மாநில விவசாயிகள் ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.