- எரிபொருளுக்காக ஈரானுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதன் மூலம் திருப்பிச் செலுத்த எதிர்பார்க்கப்படும் 250.9 மில்லியன் அமெரிக்க டொலரில் 55 மில்லியன் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன- இலங்கை தேயிலைச் சபையின் தலைவர்.
- வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அங்கு தென்னை முக்கோணம் ஸ்தாபிக்கப்பட்டது- தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்.
- மொனராகலை, அம்பாறை, பதுளை ஆகிய இடங்களில் இறப்பர் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது – இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்.
- சர்வதேசச் சந்தையில் இலங்கையின் கறுவா வர்த்தக நாமத்தை பிரபலப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன- கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்.
- அந்நிய செலாவணியை அதிகரிக்கும் நோக்குடன் விவசாய ஏற்றுமதி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க நாடளாவிய ரீதியில் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்ககப்பட்டுள்ளன – ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் (அபிவிருத்தி).
கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடும்போது, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் விவசாய ஏற்றுமதித் துறையில் தெளிவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு பதிவாகியிருந்த விவசாய ஏற்றுமதி வருமானத்தின் பாதகமான நிலைமையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகளின் காரணமாக இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்;
“2022 உடன் ஒப்பிடும்போது, 2023 இல் விவசாய ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளது. அதன்படி எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாக 2024 இன் முதல் ஆறு மாதங்களில் விவசாய ஏற்றுமதித் துறையில் தெளிவான வளர்ச்சியை உருவாக்க முடிந்தது.
இக்காலத்தில் நிலவிய காலநிலை விவசாயத்துக்கு சாதகமாக இல்லை என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட வேண்டும். இத்தகைய சவால்களை எதிர்கொண்டு அடைந்த முன்னேற்றம் உண்மையில் வெற்றியாகும் என்பதையும் கூற வேண்டும்.
உதாரணமாக, 2023 ஏப்ரல் மாதமாகும்போது, தேயிலை மூலம் கிடைத்த 407.6 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம், 2024 ஏப்ரல் மாத்தில் 450.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.
மேலும், 2023 ஏப்ரல் மாதத்திற்குள் தேங்காய் ஏற்றுமதி மூலம் 212 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்தது. அது 2024 ஏப்ரல் மாதமாகும்போது 263 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
2023 ஏப்ரல் மாதத்தில் 299 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த இறப்பர் ஏற்றுமதி வருமானம் 2024 ஏப்ரல் இல் 335 மில்லியனாக அதிகரித்துள்ளது.
மேலும், இதே காலப்பகுதியில் கறுவா ஏற்றுமதி வருமானம் 53.3 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 56.1 மில்லியனாகவும், மிளகு ஏற்றுமதி வருமானம் 13.3 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 14 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது.
விவசாயமானது தொடர்ந்து ஏற்ற இறக்கம் ஏற்படும் துறையாகும். கடந்த காலத்தில் தேயிலை உற்பத்தி குறைந்ததால் உரத்தின் தேவை அதிகரித்தது. அதன்படி உரம் வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். ஒவ்வொரு 50 கிலோ உர மூட்டைக்கும் 2000 ரூபாய் மானியத்தில் உரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
தற்போது, 10,000 மெட்ரிக் தொன் தேயிலை உரம் பயிர்ச்செய்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. எஞ்சிய 20,000 மெட்ரிக் தொன் மேற்குறிப்பிட்ட தரப்பினருக்கு மேலதிகமாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களை இணைத்துக் கொண்டு, உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மொத்தமாக தேயிலை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 745 ஹெக்டேயரில் தேயிலை மீள் நடுதல் மற்றும் நேரடி பயிர்ச்செய்கை தொடர்பான மானியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் கீழ் 324 விவசாயிகளுக்கு 140 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கு 60 மில்லியன் ரூபாயை ஒதுக்கி 800,000 தேயிலை செடிகளை நடும் புதிய திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை தேயிலைச் சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை நேரடி தேயிலை பயிர்ச்செய்கை திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. இதற்காக 750 மில்லியன் ரூபாய் பயன்படுத்தப்படவுள்ளது.
தற்போது, தேங்காய் சிரட்டை மற்றும் தேங்காய் மட்டை சார்ந்த உற்பத்திகளும் இந்நாட்டிற்கு வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித் தருகின்றது. 2022 ஆம் ஆண்டில், தேங்காய் சார்ந்த ஏற்றுமதி மூலம் 817 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், வெள்ளைப் பூஞ்சு நோய் காரணமாக தேங்காய் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் கூட, சரியான ஒழுங்குபடுத்தல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பயன்படுத்தியன் ஊடாக 700 மில்லியன் அமெரிக்க டொலரை நாட்டிற்கு வருமானமாகக் கொண்டு வர முடிந்தது. 2024 ஏப்ரல் மாத நிலவரப்படி, 263.06 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டுள்ளதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24% வளர்ச்சியாகும்.
2022, 2023 ஆம் ஆண்டுகளில் பயிரிடப்பட்ட, புதிய இறப்பர் பயிர் பரப்பளவு 921 ஹெக்டேயராகவும், மீள் நடவு செய்யப்பட்ட இறப்பர் பரப்பளவு 2743 ஹெக்டேயராகவும் உள்ளது. 2024 இல் 1135 ஹெக்டேயர் இறப்பர் பயிரிட திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அதில், 605 ஹெக்டேயரில் புதிதாகப் பயிரிடலும், 415 ஹெக்டேரில் மீள்நடுகையும் செய்யப்படும். இதற்காக பயிர்ச்செய்கைக்குத் தேவையான செடிகளை வழங்குவதற்கு 149 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னர் காணப்பட்ட இறப்பர் விவசாய மானிய முறை 2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படாது. மேலும் 2023 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு மானியமாக திணைக்களம் இலவசமாக செடிகளை வழங்குகின்றது.”
இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல்;
“ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், தேயிலை ஏற்றுமதியின் ஊடாக ஈரானுக்குச் செலுத்த வேண்டிய எண்ணெய்க்கான கடனை இலங்கை கடந்த வருடம் ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் செலுத்த ஆரம்பித்துள்ளது.
அந்த உடன்படிக்கையின் கீழ், தேயிலை ஏற்றுமதியின் மூலம் பெற்றோலியத்துக்காக ஈரானுக்குச் செலுத்த வேண்டிய 250.9 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கடனில் இதுவரை 55 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளது. 2024 இன் முதல் 4 மாதங்களில், 4.1 மில்லியன் கிலோ தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது, இது 2023 இன் முதல் 4 மாதங்களில் ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.”
தெங்கு அபிவிருத்திச் சபையின் தலைவர் ரொஷான் பெரேரா;
“தெங்கு சார்ந்த உற்பத்தியாளர்களின் உற்பத்திச் செலவைக் குறைத்து தரம், திறன், அளவு, தேவையான மேம்பாடுகள், இயந்திரங்களை கொள்வனவு செய்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான நிதி உதவியைப் பெறுதல் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பிராந்திய அபிவிருத்தி வங்கியுடன் கடன் திட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது.
இதனால், ஒரு தொழில் முனைவோருக்கு 6% மானிய வட்டியில் அதிகபட்சமாக 35 இலட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படுவதுடன், கடன் தொகையை அதிகபட்சமாக 100 இலட்சம் ரூபாயாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களைக் கருத்தில் கொண்டால் 2022 ஆம் ஆண்டில் சுமார் 53.4 மில்லியன் ரூபாயும் 2023ஆம் ஆண்டில் 35.7 மில்லியன் ரூபாயும் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 2024 ஆம் ஆண்டிற்கு 1012 உற்பத்திகளுக்காக 752 தேங்காய் தொடர்பான உற்பத்தியாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 636 தெங்கு சார் ஏற்றுமதியாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தேங்காய் மற்றும் இளநீர் உற்பத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய வெள்ளை ஈ நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தத் தொடங்கப்பட்ட வெள்ளை ஈ கட்டுப்பாட்டுத் திட்டம் அக்டோபர் 2022 முதல் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 1,051,323 தென்னை மரங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, 3,046 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
அத்துடன், பாரம்பரிய பிரதேசங்களுக்கு அப்பால் வடமாகாணத்திலும் தெங்கு முக்கோணத்தை நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேங்காயின் தேவையை நுகர்வுக்கும் ஏற்றுமதிக்கும் வழங்குவதும் வட பிராந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் இதன் நோக்கங்களாகும். இத்திட்டத்தில் இதுவரை 489,077 தென்னங்கன்றுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.”
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் சீ. சி முஹந்திரம்;
“2024 ஆம் ஆண்டில் மொனராகலை, அம்பாறை, பதுளை பிரதேசங்களில் பாரம்பரியமாக இறப்பர் பயிரிடப்படாத பிரதேசங்களில் இறப்பர் செய்கையை விரிவுபடுத்தும் விசேட வேலைத்திட்டமாக 115 ஹெக்டேயரில் புதிதாக இறப்பர் செய்கையை மேற்கொள்ள இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அதற்காக 18 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இறப்பர் செய்கையின் ஊடாக உள்ளூர்ஈறப்பர் உற்பத்தியை 86,825 கிலோவினால் அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஜனவரி 1 முதல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இறப்பர் மற்றும் றப்பர் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது, அந்த தயாரிப்புகள் ‘காடழிப்புக்கு’ பங்களிக்காத தயாரிப்புகளாக சரிபார்க்கப்பட வேண்டும். அவ்வாறு சரிபார்க்க முடியாத தயாரிப்புகள் ஏற்றுமதிக்காக அனுமதிக்கப்பட மாட்டாது.”
கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம். எம். ஜே.கே லிந்தர;
“கறுவா பயிற்செய்கையை மேம்படுத்துவதற்காக கறுவா அபிவிருத்தி திணைக்களம் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது. இது 2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவாக ஆரம்பிக்கப்பட்டது.
அதன் கீழ், சர்வதேசச் சந்தையில் இலங்கை கறுவா நாமத்தை பிரபலப்படுத்தல் விளம்பரப்படுத்துதல் ஆகியவற்றின் முதன்மை நோக்கத்துடன், காலி பின்னதுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் இதன் தலைமையகம் நிறுவப்பட்டுள்ளது. கறுவா ஏற்றுமதியாளர், உற்பத்தியாளர், தொழிற்துறையுடன் தொடர்புடைய தரப்பினர் இந்த திட்டத்தின் ஊடாக நன்மை அடைவர்.
இந்த Cinnamon Gate திட்டத்தின் முதல் கட்டத்திற்காக மதிப்பிடப்பட்ட தொகை ரூ.224,909,704.31 ஆகும். அதில் ரூ.21,857,211.80 செலவிடப்பட்டுள்ளது.
கறுவா உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக, நவீன தொழில்நுட்ப பயிர்ச்செய்கை முறைகளைப் பயன்படுத்தி ஏக்கருக்கான கறுவா விளைச்சலை மேம்படுத்தவும், கறுவா தொழில்துறையின் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், பெறுமதி சேர் பொருட்களைக் கொண்ட தொழிற்சாலைகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஊடாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் கறுவா பயிரிடுவதற்கான சாத்தியமுள்ள பிராந்திய செயலகங்களை இலக்காகக் கொண்டு கறுவா தொழில் தொடர்பான சுமார் 1050 நேரடி பயனாளிகளுக்கும் 101,000 மறைமுக பயனாளிகளுக்கும் நன்மைகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின்போது, இலங்கையின் உண்மையான கறுவாவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து உள்ளூர் கறுவாத் தொழிலுக்கு புதிய சந்தையை திறந்து அதன் மூலம் அந்நியச் செலாவணியைப் பெறும் நோக்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன்படி, சீனாவுக்கு உண்மையான கறுவாவை ஏற்றுமதி செய்வதற்கான புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”
ஏற்றுமதி விவசாயத்துறைப் பணிப்பாளர் (அபிவிருத்தி) ஆர்.கே.டபிள்யூ. ரன்கொத்துகும்புர;
“மத்திய, சப்ரகமுவ, மேல், தென், ஊவா, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலும் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் திறனை அதிகரிக்கும் நோக்குடன் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தினால் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்றுமதி விவசாயப் பொருட்களின் தரத்தைப் பாதுகாத்து அதிக அந்நியச் செலாவணியைப் பெறும் நோக்குடன் இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
இதன் கீழ் கறுவா, மிளகு, கோப்பி, கொக்கோ, சாதிக்காய், கிராம்பு, ஏலக்காய், மஞ்சள், இஞ்சி, வெற்றிலை, பாக்கு, குடம்புளி உள்ளிட்ட 15 வகையான பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
ஏற்றுமதி விவசாயப் பயிற்செய்கைகளுக்குத் தேவையான புதிய தொழில்நுட்ப அறிவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024 இல் இதுவரை 1500 விவசாயப் பயிற்சித் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.”