ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் விவசாயத் திணைக்களம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) இணைந்து, இலங்கை முழுவதும் உள்ள நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கிடையில் ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து மேலாண்மை (IPNM) தொடர்பான அறிவு மற்றும் நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கில் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இந்நிகழ்வு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி பொலன்னறுவையில் விவசாயிகளின் கள தினத்துடன் ஆரம்பித்து, நேனா வகாவ (நெல் அறுவடை) என்ற புதிய டிஜிட்டல் கற்றல் தளத்தை அறிமுகப்படுத்தியது.
“ஒரு வளமான அறுவடைக்கு வளமான மண்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஆரம்பமான உழவர் கள நாள், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் திரு ஜொஹான் ஹெசே, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான FAO பிரதிநிதி திரு விம்லேந்திர ஷரன் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் முக்கிய பிரதிநிதிகளால் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த விவசாய மாணவர்கள் மற்றும் 330 விவசாயிகள் பங்கேற்று, நீடித்த மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட விவசாயத்திற்கான IPNM நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான அனுபவத்தையும் நுண்ணறிவையும் பெற்றனர்.
விவசாயிகளின் கள தினம் என்பது FAO மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கூட்டு முயற்சியான RiceUP திட்டத்தின் முக்கிய அங்கமாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் 4 மில்லியன் யூரோக்களுடன் நிதியளிக்கப்பட்டது. சிறிய அளவில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடையே IPNM நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் இலங்கையின் உணவுப் பாதுகாப்பு அமைப்பின் பின்னடைவை குறைப்பதை RiceUP நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் தரமான நெல் விதைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் அதே வேளை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது.
IPNM அறிவை நேரடியாக விவசாயிகளுக்கு கொண்டு செல்வதற்கான முன்னோடி படியாக அமைந்தது “நேனா வகாவ (நெல் அறுவடை)” டிஜிட்டல் கற்றல் தளத்தை அறிமுகப்படுத்தியதாகும். நெற் பயிர்ச்செய்கையில் IPNM இன் நுணுக்கங்களைப் பற்றி விவசாயிகளுக்குக் கற்பிக்க சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விரிவான மின்-கற்றல் விரிவாக்கங்களை வழங்குகிறது. nenawagawa.doa.gov.lk இணையத்தளமானது இணைய சாதனங்கள் மூலம் நிலையான விவசாய நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள அணுகக்கூடியது.
RiceUP முயற்சி ஏற்கனவே அம்பாறை, பதுளை, அம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 289 விவசாய விரிவாக்க அதிகாரிகளிடமிருந்து 6,000 விவசாயிகள் IPNM குறித்த பயிற்சியைப் பெற்றுள்ளனர். இந்த பயிற்சியானது உரங்கள் மற்றும் இதர உள்ளீடுகளின் திறமையான பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு செலவுகளைக் குறைப்பதற்கும், மேம்பட்ட உற்பத்தித்திறனுக்கும், எதிர்கால விவசாய சவால்களுக்கும் வழிவகுக்கும்.
இந்நிகழ்வில், திரு ஜொஹான் ஹெசே, “FAO உடனான எமது ஒத்துழைப்பு இலங்கையின் விவசாயத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கும், உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. நாம் ஒன்றிணைந்து உரங்கள் மற்றும் நாற்றுகள் போன்ற அத்தியாவசிய உள்ளீடுகளை விநியோகித்துள்ளோம். FAO வின் தொழில்நுட்ப உதவியுடன் நடைபெற்று வரும் தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய மானியம், இலங்கையில் மிகவும் நிலையான, நெகிழ்ச்சியான மற்றும் உற்பத்தித் துறையை நோக்கிய மாற்றத்தை விரைவுபடுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டார்.
இலங்கையில் நிலையான மற்றும் காலநிலை திறனான விவசாய நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான FAO பிரதிநிதி திரு விம்லேந்திர ஷரன், நாட்டிலுள்ள 400,000 நெல் விவசாயிகளுக்கு பயிற்சித் திட்டத்தை விரிவுபடுத்தி எடுத்துச் செல்வதற்கான FAOவின் திட்டங்களைப் பகிர்ந்து கொண்டார். நாட்டில் நெல் விவசாயத்தின் IPNM மூலம் நெல் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்பட்டு உள்ளீட்டுச் செலவுகள் (இரசாயன உரங்கள்) குறைக்கப்பட்டதன் மூலம் விவசாயிகள் அதிக வருமானத்தை பெற முடியும் என்பதனையும் வலியுறுத்தினார்.
FAO, அதன் பங்குதாரர்களுடன் இணைந்து, இலங்கையின் நெல் விவசாயத் துறையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்க உறுதிபூண்டுள்ளது. நிலையான விவசாய முறைகளை ஊக்குவித்தல் மூலமும் மற்றும் நேனா வகாவ (நெல் அறுவடை) இணையத்தளம் போன்ற புதுமையான கற்றல் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், நீண்ட கால உணவுப் பாதுகாப்பைப் பாதுகாக்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மற்றும் இலங்கையில் விவசாயத்தின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த முயற்சி முயல்கிறது.
Source: https://www.fao.org/srilanka/news/detail-events/en/c/1678602/