தற்போதைய விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் விவசாயிகளை தொடர்ந்தும் அரசியல் கையாட்களாக மாற்ற முடியாது

உள்நாட்டு விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் காரணமாக இனிமேல் விவசாயிகளை அரசியல் கையாட்களாக்க முடியாது என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சிறு மற்றும் பெரும்போகத்துடன் இணைந்ததாக பயறை பயிரிட்டு 18,828 மெற்றிக் தொன் அறுவடையை பெறும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் கீழ் ஒரு விவசாயிக்கு ஹெக்டெயாருக்கு 25 கிலோ விதைப் பயறு வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் ஊடாக நெல் விளைச்சலின் மூலம் சுமார் 03 மில்லியன் மெற்றிக் தொன் அரிசியை உற்பத்தி செய்ய முடிந்துள்ளதாகவும், இதன் மூலம் நாட்டில் மேலதிக அரிசித் தொகையைப் பேணமுடிந்துள்ளதாகவும், இந்நாட்டு நெல் உற்பத்தி 4.5 மில்லியன் மெட்ரிக் தொன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,

“2021 பெரும்போகத்தில் உர நெருக்கடி காரணமாக, நெல் உற்பத்தி தடைப்பட்டது. எனவே 2022ஆம் ஆண்டு இந்நாட்டு மக்களின் நுகர்வுக்குப் போதுமான அரிசி உற்பத்தி செய்யப்படவில்லை. அதன் மூலம் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவை தாண்டும் என சிலர் ஊடக சந்திப்புகளில் தெரிவித்தனர்.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் உள்நாட்டு நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தன. 2022 சிறு போகத்திற்கு தேவையான யூரியா உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும் பெரும் போகத்தில் நெல் உற்பத்திக்கு உரம் கொள்வனவு செய்ய ஹெக்டெயாருக்கு 20,000 ரூபாய் நிதி மானியம் வழங்கப்பட்டது. இதன் விளைவாக, 2023 ஆம் ஆண்டில் அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டி ஏற்படவிலை. 2023ல் இலங்கையில் நெல் உற்பத்தி 4.5 மில்லியன் மெட்ரிக் தொன்களாகும். நம் நாட்டில் ஆண்டுக்கு 2.4 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி தேவை. 2023 ஆம் ஆண்டில், நெல் அறுவடையில் இருந்து சுமார் 03 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை உற்பத்தி செய்தோம்.

அதன்படி கடந்த ஆண்டு நம் நாட்டில் அரிசி மேலதிகமாக இருந்தது. விவசாயிகள் எங்களை நம்பி எமது அறிவுரைப்படி செயற்பட்டனர். அதனால்தான் இந்த நாட்டில் இன்னும் அரிசி மேலதிகமாக இருக்கிறது.

மேலும், கடந்த காலங்களில் சோளத்திற்கு பற்றாக்குறை இருந்ததால், கால்நடை தீவன உற்பத்திக்காக சுமார் 100,000 மெட்ரிக் தொன் அரிசியையும் வழங்கினோம். கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு கால்நடை தீவனமாக அரிசியை வழங்குவதன் மூலம், எமது நாடு சோளத்தை இறக்குமதி செய்ய செலவழித்த பணத்தை மிச்சப்படுத்த முடிந்தது.

05 போகங்களில் நெல் விளைச்சலை இரட்டிப்பாக்குவதே எமது இலக்காகும். இதன்படி, நெற்செய்கைக்கு புதிய விவசாய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி ஹெக்டெயார் ஒன்றின் விளைச்சலை 09 மெற்றிக் தொன்களாக அதிகரிப்பதே எமது இலக்காகும். அதற்கான தொழில்நுட்பப் பேக்கேஜை அறிமுகப்படுத்தவுள்ளோம் என்பதைக் கூற வேண்டும்.

அத்துடன் அநுராதபுரம், அம்பாறை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, கண்டி ஆகிய விவசாயப் பிரதேசங்களில் அடுத்த 5 போகங்களில் நெல் விளைச்சலை இரட்டிப்பாக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றோம்.

மேலும், சிறு போகம் முடிந்தவுடன் மூன்றாம் போகத்தில் இடைப் பயிர்ச்செய்கையை உடனடியாகத் தொடங்க விவசாயத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான சிறு போகம் முடிவடைந்தவுடன் பயறு பயிரிடும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். 2024 சிறு போகத்தில் இதுவரை 4464 ஹெக்டெயார் பயறு பயிரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்பார்க்கப்படும் உற்பத்தி 6500 மெட்ரிக் தொன்களாகும்.

மூன்றாவது போகமாக இடைப்பட்ட போகத்தில், 8943 ஹெக்டேரில் பயறு பயிரிடுகிறோம். இதனால், 6707 மெட்ரிக் தொன் பயறு விளைச்சல் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டு 13,407 ஹெக்டேரில் பயறு பயிரிடப்பட்டுள்ளது. 13,207 மெட்ரிக் தொன் விளைச்சல் எதிர்பார்க்கப்படுகிறது.

வருடாந்த பயறு தேவையில் 75 வீதத்தை சிறு போகத்தில் பெறுவதே எமது நோக்கமாகும்.

இந்நாட்டில் ஆண்டுக்கு தேவைப்படும் பயறு 20,000 மெட்ரிக் தொன்களாகும். சிறு போகத்திலும் பெரும் போகத்திலும் பயறு பயிரிடுவதன் மூலம் 18,828 மெட்ரிக் தொன் விளைச்சலை எதிர்பார்க்கிறோம். மேலும், இடைப்பட்ட போகத்திற்கு 01 ஹெக்டெயாருக்கு 25 கிலோ விதை பயறுகளை இலவசமாக வழங்குகிறோம்.

இதன்படி, 01 ஹெக்டெயாருக்கு பயறு பயிர்ச்செய்கைக்கு ஒரு விவசாயிக்கு 25,000 ரூபா பெறுமதியான பயறு விதைகள் வழங்கப்படும். பயறு இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் இறக்குமதி வரி விதிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உள்நாட்டு பயறு விவசாயியையும் பாதுகாக்கலாம்.

மேலும் அரசுக்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களையும் ஒரே நிறுவனமாக மாற்றினோம்.

அதன்படி, அதன் பலனை விவசாயிகளுக்கு வழங்க முடிந்துள்ளது. இதனால் 05 வகையான உரங்களின் விலையை 1500 முதல் 2000 ரூபா வரை குறைக்க அரச உர நிறுவனம் (State Fertilizer Company) நடவடிக்கை எடுத்துள்ளது.

கறுவா மற்றும் தென்னை பயிர்ச்செய்கைக்கு இந்த சலுகையை வழங்குவதுடன், தேயிலைக்கான உரங்களின் விலையையும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் விவசாயிகளின் பிரச்சினைகள் அரசியல் கோசங்களாக மாற்றப்பட்டுள்ளன. அது பல்வேறு போராட்டங்களுக்கு அவர்களைத் தூண்டியது.

ஆனால், தற்போதைய அரசாங்கம் உள்நாட்டு விவசாயத்தை மேம்படுத்துவதற்காகத் தொடங்கியுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் காரணமாக தொடர்ந்தும் விவசாயிகளை அரசியல் கையாட்களாக மாற்ற முடியாது” என்று கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *