இலங்கை மிகவும் சிறிய நிலப்பரப்பையும் அதிக மக்கள் தொகை அடர்த்தியையும் கொண்ட ஒரு வெப்பவலய நாடாகும். இதன் காரணமாக, தற்போதுள்ள பயிர்ச்செய்கை நிலத்தின் அதிகபட்ச உற்பத்தித் திறனைப் பேணுவதுடன், அதனை தரிசு நிலமாக மாறாமல் தடுப்பதும் இலங்கையில் சவாலாக உள்ளது. மீளுருவாக்க விவசாயம் இன்று உலகம் எதிர்கொள்ளும் காலநிலை மாற்றத்தை மாற்றியமைக்க உதவுகிறது.
மீளுருவாக்க விவசாயமானது , மண்ணின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பது மட்டுமன்றி காபன் (C ) மூலக்கூற்றினை மாற்றியமைப்பதன் மூலம் பல்லுயிர் இழப்பை மாற்றியமைத்து காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் அடிப்படைக் கருத்துகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. நீண்ட கால விவசாய பயிர்ச்செய்கை மற்றும் இரசாயன பாவனையினால் மண்ணின் ஆரோக்கியம் குறைவடைந்து வருகின்றது. கார்பன் சுழற்சி, நீர் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி போன்ற உயிரியல் செயல்முறைகள் சரிவர நிகழாத பட்சத்தில் உயிர்க்கோளத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு, காலநிலை மாற்றங்களை நேரடியாக பாதிக்கிறது. உயிர்பல்வகைமையானது நீண்டகாலமாக ஒரே வகையான தாவரத்தை நடுவதன் மூலமும் பாதிப்படைகின்றது.
மீளுருவாக்கல் விவசாயமானது இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை ஏற்படுத்துவதில் பல பகுதிகளில் கவனம் செலுத்துவதோடு மீளுருவாக்கல் செயன்முறையை செயல்படுத்த அல்லது எளிதாக்குவதற்கு தேவையான வேளாண் வழிமுறைகளை அடையாளம் காணவும்,மீளுருவாக்க விவசாயத்தை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சாத்தியமான விவசாய நடைமுறைகளில் ஒருங்கிணைக்கவும், அத்தகைய புதிய விவசாய நடைமுறையின் சாத்தியமான அரசியல், சமூக மற்றும் பொருளாதார தாக்கத்தின் தன்மை என்பன அண்மைக்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களாகும். இத் திட்டங்களை உயர்த்துவது மீளுருவாக்க விவசாயத்தை நோக்கிய முன்னேற்றங்களை வழங்குகிறது.
ஆனால் இதுபோன்ற பல திட்டங்கள் சில சூழ்நிலைகளில் முடங்குவதிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக சேதன உரக் கொள்கையின் குறுகிய கால நடவடிக்கையை குறிப்பிடலாம். இத்தகைய நிகழ்வுகள் மீளுருவாக்கல் விவசாயம் தொடர்பான சமூக மனப்பான்மையில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துவதோடு உணவு உற்பத்தி செயல்முறையின் உடனடி மாற்றத்தால் உணவுப் பாதுகாப்பும் பாதிக்கப்படுகிறது. எனவே, மீளுருவாக்கல் விவசாயத்தை பின்பற்றும்போது , நீண்ட காலத்திற்கு முன்பே திட்டமிடுவதும், அனைத்து பங்குதாரர்களின் ஆதரவைப் பெறுவதும், விழிப்புணர்வு மூலம் சமூக மனப்பான்மையை வளர்ப்பதும் மிக முக்கியமாகும்.